மாவட்ட செய்திகள்

உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி + "||" + MK Stalin, on EVKS.Elangovan We will take legal action

உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வரும் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தேனி,

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் அமைக்கப்பட்டுள்ள தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில், துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மேகதாது அணை கட்டுவதற்கு நீங்களும், உங்கள் மகனும் தான் மணல் அனுப்பி வைப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு கூறியுள்ளாரே?

பதில்:- மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு எடுத்தபோது, ஜெயலலிதா காலத்திலேயே அதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கோர்ட்டும் அதற்கு தடை விதித்துள்ள நிலையில், மேகதாது அணை கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்கள் சார்ந்த கட்சி இதற்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த போது என்னென்ன சாதனைகள் செய்துள்ளார்கள் என்பதை கூறி மக்களிடம் ஆதரவு கேட்க வேண்டும்.

பொய்யான, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தவறான தகவல் கொடுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தவறான, உண்மைக்கு மாறான, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து அவர் மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் உரிய முறையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம். அத்துடன் நீதிமன்றத்தில் தனியாக அவர் மீதும் வழக்கும் போடப்படும்.

கேள்வி:- தேர்தல் காலத்தில் பண சுனாமி அடிப்பதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே?

பதில்:- அது உண்மைக்கு மாறான செய்தி. சிறிதளவிலும் அதில் உண்மை இல்லை.

கேள்வி:- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டும் போது, வாரப்பத்திரிகைகளில் எழுதிய ஆதாரங்களின் அடிப்படையில் சொன்னதாகவும், எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளாரே?

பதில்:- அவர் அதிகாரப்பூர்வமான வேட்பாளர். அவர் தான் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்க வேண்டும். இன்னொரு பத்திரிகையை சொல்வது சரியாக வராது. உறுதியாக அவர் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி:- எந்த கோர்ட்டில் வழக்கு தொடரப் போகிறீர்கள்?

பதில்:- முறைப்படி இந்த வழக்கு ஐகோர்ட்டில் தொடரப்படும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம்.

கேள்வி:- 8 வழிச்சாலை திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று முதல்-அமைச்சர் சொல்லி இருக்கும் நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை உறுதியாக கொண்டு வருவோம் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியிருக்கிறார். இதில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

பதில்:- முதல்-அமைச்சர் சொல்லி இருப்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.

கேள்வி:- 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- 18-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கும் 18 தொகுதிகளிலும், அடுத்த மாதம் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் என 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும்.

கேள்வி:- 2016-ம் ஆண்டு தேர்தலில் ஓட்டு விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், துணை முதல்-அமைச்சர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்:- இதுவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதுகுறித்தும் சட்டப்படியான உரிய வழக்கு தொடரப்படும். இதுபோன்ற கருத்துக்களை எதிர்க்கட்சிகள் பொதுவாக எழுப்புகின்றனர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான திட்டங்கள் இல்லை. இனி எந்தக் காலத்திலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பப்போவது இல்லை. 2007-ல் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது தான் காவிரி நடுவர் மன்றத்தில் இறுதி தீர்ப்பு வந்தது. அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. ஜெயலலிதா தான் சட்டப் போராட்டம் நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பை பெற்று, மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை 2013-ல் வெளியிட வைத்தார்.

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பெற்றுத் தருவதில் காங்கிரஸ்-தி.மு.க. கட்சிகள் மிகப்பெரிய வரலாற்று பிழையை ஏற்படுத்தியது. ராகுல்காந்தி கர்நாடகாவில் பிரசாரம் செய்த போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன? காங்கிரஸ் தலைவர்கள் தமிழக மக்களை வஞ்சிக்கும் கருத்துக் களை சொல்லி வருகிறார்கள். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தையும், காவிரி மேலாண்மை நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும், சட்டப்போராட்டம் நடத்தி தான் பெற்றுள்ளோம். அதையும் காங்கிரஸ் ஆளும் கட்சியாக வந்த பிறகு இந்த இரு ஆணையங்களையும் கலைப்போம் என்று ராகுல் காந்தி சொல்கிறார். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தமிழகத்தின் நீராதாரத்தை வஞ்சிக்கும் கூட்டணியாக தான் இருக்கிறது.

கேள்வி:- பிரதமர் மோடி ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்த போது வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே?

பதில்:- தகுதியும் திறமையும் இருந்தால், வாரிசாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் செல்வாக்கை பெற்றால் அவர்கள் நீடித்து நிலைத்து இருப்பார்கள். மக்களின் செல்வாக்கை பெறவில்லை என்றால் அவர்களுக்கு அரசியலில் இடமில்லை.

கேள்வி:- தேர்தல் ஆணையத்தின் விதிகளை ஆளும் கட்சியினர் தொடர்ந்து மீறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே?

பதில்:- தேர்தல் விதிமுறைகளை காங்கிரஸ், தி.மு.க.வினர் தான் தொடர்ந்து மீறி வருகிறார்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.

கேள்வி:- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் இருந்து எந்த மனுவும் வரவில்லை என்று மத்திய மந்திரி ஒருவர் சொல்லி இருக்கிறாரே? அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடியது அ.தி.மு.க. அரசு தான். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு முயற்சி மேற்கொள்ளும். கைவிட மாட்டோம்.

கேள்வி:- தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறி உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- இந்த திட்டத்தை அவர்கள் ஏற்கனவே அறிவித்த போதே, இந்த திட்டம் தோல்வி அடையும் என்று ஜெயலலிதா தெரிவித்து இருந்தார். அந்த பகுதியில் கடலுக்குள் மண் நகரும் தன்மை கொண்டது. அங்கு மண்ணை அள்ளி பள்ளமாக்கினாலும் மீண்டும் மண் மூடப்படும் நிலைமை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை அளித்துள்ளனர். அதை தான் ஜெயலலிதா சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டார். அதுபோல் அது தோல்வியில் முடிந்துள்ளது.

கேள்வி:- மீனவர் பிரச்சினையில் பா.ஜ.க. எதுவும் செய்யவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்களே?

பதில்:- அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தானே. இனி எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது.

கேள்வி:- தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதே?

பதில்:- சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி எல்லாம் உண்மை அல்ல. அதுவே ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது.

கேள்வி:- பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் குறித்த சர்ச்சையில் அவருடைய வெற்றியை பறிப்பதற்காக உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் இதற்கு காரணம் என்று அந்த வேட்பாளர் சொல்லி இருக்கிறாரே?

பதில்:- எங்கள் குடும்பம் இதுபோன்ற ஈனத்தனமான, கீழ்த்தரமான அரசியலை செய்யும் நிலைமை என்றைக்கும் இல்லை. தேர்தல் நேரத்தில் எதை செய்ய முடியுமோ அதை சொல்வோம். சாதனைகளாக எதை செய்து இருக்கிறோமோ அதை சொல்லியே வாக்கு கேட்கிறோம்.

கேள்வி:- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரத்தின் போது துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மாவட்டமான இங்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதாக கூறி வருகிறாரே?

பதில்:- மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு எங்கும் இல்லை.

கேள்வி:- பல்வேறு கருத்துக் கணிப்புகளில் மத்தியில் பா.ஜ.க.வும், தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியும் அதிக இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும்கூறப்படுகிறதே?

பதில்:- கருத்துக்கணிப்புகளை மட்டுமே வைத்து முடிவு எடுக்கப்படும் என்றால் தேர்தலே நடத்த தேவையில்லையே. வாக்குகள் எண்ணப்பட்ட பின்பு தானே முடிவு தெரியும். 2016-ம் ஆண்டு கருத்துக்கணிப்பில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று தான் கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், அதை பொய்யாக்கி அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

கேள்வி:- 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- 40 தொகுதிகளுக்கும் சென்று வந்து விட்டேன். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மக்களின் ஆதரவும், எழுச்சியும் எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதும் உள்ளது.

கேள்வி:- தமிழகத்தில் முற்போக்கு அமைப்புகள் பா.ஜ.க. ஒழிப்பு பிரசாரத்தை முன்வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்தியாவில் எங்கும் சாதி, மதக்கலவரம் ஏற்படவில்லை. தமிழகத்திலும் எங்கும் சாதி, மதக் கலவரம் ஏற்படவில்லை. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. அரசு உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு.

கேள்வி:- ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிலைப்பாடு என்ன?

பதில்:- எங்களின் நிலைப்பாடு ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் அங்கு வராது என்பது தான். சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துக் கொண்டே இருப்போம். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தாது.

கேள்வி:- மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா இனி எந்த காலத்திலும் பா.ஜ.க. வுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருந்தாரே?

பதில்:- 2007-ல் பா.ஜ.க. வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்து இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று கருணாநிதி கூறினார். தற்போது காங்கிரஸ் கட்சியுடன் தான் தி.மு.க. கூட்டணி சேர்ந்துள்ளது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை மு.க.ஸ்டாலின் மீறி இருக்கிறாரா? இல்லையா? இப்போது ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்?

கேள்வி:- அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக் கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் எப்போது அறிவிக்கப்படுவார்கள்?

பதில்:- உறுதியாக வெற்றி வேட்பாளர்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.

கேள்வி:- தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான உங்கள் மகன் வெற்றி பெற்றால் அவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்குமா?

பதில்:- நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையதுகான் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாக்களை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாக்களை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு போகாதது ஏன்? முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு போகாதது ஏன் என்று முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
3. காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத்து சீலை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு
மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய ஆம்பூர் மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.