மாவட்ட செய்திகள்

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு + "||" + Electoral officer examining the center of vote counting

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி,

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 49 ஆயிரத்து 740 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் ஆயிரத்து 610 வாக்குச்சாவடிகள் உள்ளன.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. வாக்காளர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்களித்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் வி.வி.பேட் எந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைக்கவும், வாக்கு எண்ணிக்கை நடத்தவும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி தயார்படுத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதையடுத்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணிக்கை நடக்கும் தேதி வரை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தனி அறைகள் என மொத்தம் 6 அறைகளில் உள்ள ஜன்னல்கள் தகரம் கொண்டு மூடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 6 அறைகளில் ஏஜெண்டுகள் நேரடியாக பார்க்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் கம்புகள் வைத்து பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வாக்கு எண்ணும் மையத்தில் மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்சாரம் தடை இல்லாமல் வழங்கவும், தடைப்பட்டால் ஜெனரேட்டர் இயக்க வசதி செய்யப்பட்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் பார்வையாளருக்கான தனி அறை, தகவல் பதிவு அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது அதிகாரிகளிடம் கலந்தாலோசித்தார். அப்பகுதியில் புதர்கள் இல்லாமல் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைக்க வேண்டும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.