ஊட்டியில், மூடப்பட்ட எச்.பி.எப். தொழிற்சாலை உயர்தர மருத்துவமனையாக மாற்றப்படும் - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா உறுதி


ஊட்டியில், மூடப்பட்ட எச்.பி.எப். தொழிற்சாலை உயர்தர மருத்துவமனையாக மாற்றப்படும் - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா உறுதி
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 7:54 PM GMT)

ஊட்டியில் நலிவடைந்து மூடப்பட்ட எச்.பி.எப். தொழிற்சாலை உயர்தர மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா பிரசாரத்தின்போது உறுதியாக கூறினார்.

ஊட்டி,

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா போட்டியிடுகிறார். அவர் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, காந்தல், பிங்கர்போஸ்ட், எல்லநள்ளி, மஞ்சூர், எடக்காடு, கேத்தி, குன்னூர் மற்றும் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஊட்டி நகரில் நொண்டிமேடு, சேரிங்கிராஸ், ஏ.டி.சி., மெயின்பஜார் போன்ற பகுதிகளில் வாகனத்தில் சென்று ஆ.ராசா தேர்தல் பிரசாரம் செய்தார்.

ஊட்டி மார்க்கெட் பகுதியில் கடை, கடையாக சென்று வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி ஆ.ராசா வாக்கு சேகரித்தார். அதனை தொடர்ந்து ஐந்து லாந்தர் பகுதியில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:-

நான் மத்திய மந்திரியாக இருந்த போது, இந்திய அரசால் தொடங்கப்பட்ட அஞ்சலக அம்பு திட்டத்தின் கீழ் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்பட நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் 45 அஞ்சலகங்கள் மேம்படுத்தி நவீனமயமாக்கப்பட்டது. தொலைதொடர்பு துறை மூலம், 3ஜி சேவை தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி செலவில் முழு கணினி மாவட்டமாக மாற்றப்பட்டு, அனைத்து சான்றிதழ்களும் பொதுமக்களுக்கு இ-சேவை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

கூடலூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிக்கு கட்டிடம் மற்றும் ஆய்வகங்கள் கட்ட ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டது. ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்(எச்.பி.எப்.) தொழிற்சாலை நலிவடைந்த போது, மூடாமல் இருக்க ரூ.30 கோடி மத்திய அரசிடம் இருந்து நிதிபெற்று கொடுக்கப்பட்டது. பா.ஜனதா அரசு எச்.பி.எப். தொழிற்சாலையை மேம்படுத்தாமல் மூடிவிட்டது. நலிவடைந்து மூடப்பட்ட இந்த தொழிற்சாலையை உயர்தர மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குன்னூர் அருகே அருவங்காட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை நலிவடைந்து வருகிறது. இந்த தொழிற்சாலையை புனரமைத்து, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும். கூடலூரில் உள்ள செக்‌ஷன் 17 நிலத்தில் வசிப்பவர்களுக்கு, அவர்களுக்கு வேண்டிய உரிமை பெற்றுக் கொடுக்கப்படும். ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால், அவர்களை கவரும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் மத்திய, மாநில அரசின் நிதி பெற்று செயல்படுத்தப்படும்.

ஊட்டி, குன்னூர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளையொட்டி பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் அதிகமாக உள்ளனர். இதனால் அவர்களது குழந்தைகளுக்காக பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் முபாரக், ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story