சி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்பு பெண் கைது


சி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்பு பெண் கைது
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 8:01 PM GMT)

சி.எஸ்.எம்.டி.யில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை நாசிக்கில் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் 8-வது பிளாட்பாரத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி சுனிதா என்ற தொழிலாளி உறவினர்கள் மற்றும் 2 மாத ஆண் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். பின்னர் காலை 6.30 மணியளவில் கண்விழித்த சுனிதா கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது குழந்தை மாயமாகி இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இதேபோல் மும்ராவிலும் கடந்த பிப்ரவரி மாதம் சல்மான் என்ற 10 மாத குழந்தை கடத்தப்பட்டது. எனவே அந்த கும்பலினர் தான், 2 மாத ஆண் குழந்தையையும் கடத்தி இருக்கலாம் என கருதி தானே குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது சி.எஸ்.எம்.டி. மற்றும் மும்ராவில் கடத்தப்பட்ட குழந்தைகள் கடைசியாக நாசிக் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் 2 மாத ஆண் குழந்தையை நீலம் சஞ்சய் போரா (வயது35) என்ற பெண் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும் 2 மாத ஆண் குழந்தையை மீட்டனர்.

ஆனால் 10 மாத குழந்தை சல்மானை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story