திருவள்ளூர் தொகுதி தேர்தல் பார்வையாளர் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு


திருவள்ளூர் தொகுதி தேர்தல் பார்வையாளர் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 16 April 2019 4:15 AM IST (Updated: 16 April 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை பொது பார்வையாளர் திடீர் ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் தேர்தல் பணிகளை பொது பார்வையாளர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பை அளித்து தேர்தலை அமைதியாக நடத்திடுமாறு அவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொது பார்வையாளராக டாக்டர் சுரேந்திரகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்திற்கு வருகை தந்து தேர்தலையொட்டி நடைபெற்று வரும் பணிகளை திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி, கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தாசில்தாருமான சுரேஷ்பாபு ஆகியோரிடம் தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாகவும், விளக்கமாக அவர் கேட்டறிந்தார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 330 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரண பொருட்களை ஏற்றிச்செல்ல தயாராக நிறுத்தப்பட்டிருந்த 26 லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்தும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இதுதவிர கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து பதற்றமான வாக்குச்சாவடிகள் என ஏற்கனவே கண்டறியப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசாருடன் கலந்து பேசி பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ள வாக்குச்சாவடிகள் கூடுதலாக இருப்பின் அவற்றை கண்டறிந்து மேற்கண்ட வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்து தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் எனவும் தேர்தல் அலுவலர்களுக்கு டாக்டர் சுரேந்திரகுமார் அறிவுறுத்தினார்.

Next Story