தாராவியில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது இரும்பு சாரம் சரிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி 2 பேர் படுகாயம்


தாராவியில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது இரும்பு சாரம் சரிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 April 2019 11:15 PM GMT (Updated: 15 April 2019 8:09 PM GMT)

தாராவியில் அடுக்குமாடி கட்டிட பணியின்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த இரும்பு சாரம் சரிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை,

மும்பை தாராவி பஸ் டெப்போ அருகே உள்ள பி.எம்.ஜி.பி. காலனி பகுதியில் 23 மாடி மகாடா கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வந்தது. இதற்காக கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இரும்பு சாரம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இரும்பு சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதில் சாலையில் சென்ற ஆட்டோ மீதும், நடந்து சென்றவர் மீதும் இரும்பு சாரம் விழுந்தது.

ஆட்டோவில் இருந்த தாராவியை சேர்ந்த டிரைவர் சதாதத் அன்சாரி (வயது 30), ஆட்டோவில் பயணம் செய்த சாஜித் அலிகான் மற்றும் சாலையில் நடந்து சென்ற சாம்லால் ஜேஸ்வால் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சயானில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் கொண்டு வரும் வழியிலேயே ஆட்டோ டிரைவர் சதாதத் அன்சாரி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவலறிந்த போலீசார் ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் இரும்பு சாரம் சரிந்து விழுந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், இரும்பு சாரம் சரியாக அமைக்கப்படாததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இரும்பு சாரம் சரிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் தாராவி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story