கொடைரோடு அருகே, மான் வேட்டையாடிய 2 பேர் சிக்கினர்


கொடைரோடு அருகே, மான் வேட்டையாடிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 8:22 PM GMT)

கொடைரோடு அருகே மானை வேட்டையாடிய 2 பேர் வனத்துறையினரிடம் சிக்கினர்.

கொடைரோடு, 

கொடைரோடு அருகே உள்ள சிறுமலையில் மர்மநபர்கள் சிலர் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறுமலை வனச்சரகர் மனோஜ், கொடைரோடு பிரிவு வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் சுந்தரராஜன் மற்றும் வன காவலர் ராஜேந்திரன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் கொடைரோட்டில் பயணியர் விடுதி அருகே ஒருவர் மான் இறைச்சி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறு வேடத்தில் சென்ற வனத்துறை அதிகாரிகள், அந்த நபரிடம் மான் இறைச்சி இருக்கிறதா? என்று கேட்டனர்.

மாறு வேடத்தில் வந்தது வனத்துறை அதிகாரிகள் என்பது தெரியாமல் அவரும், மான் இறைச்சி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த மான் இறைச்சியை எடுத்து வந்து வனத்துறையினரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரை வனத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர் கொடைரோடு அருகே உள்ள அம்மாப்பட்டியை சேர்ந்த சிமியோன்ராஜா (வயது 32) என்பது தெரியவந்தது. இவர், அதே பகுதியை சேர்ந்த மோசை (67) என்பவருடன் சேர்ந்து சிறுமலை அடிவாரத்தில் மானை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோசையையும் வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் 2 பேரும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வித்யா முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து மோசை, சிமியோன்ராஜா ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story