கரூர் மனோகரா கார்னரில் அ.தி.மு.க.-காங்கிரஸ் போட்டி பிரசாரம்? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியால் பரபரப்பு


கரூர் மனோகரா கார்னரில் அ.தி.மு.க.-காங்கிரஸ் போட்டி பிரசாரம்? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 8:38 PM GMT)

கரூர் மனோகரா கார்னரில் இன்று காங்கிரஸ் பிரசாரம் மேற்கொள்ளும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதே இடத்தில் அ.தி.மு.க.வும் பிரசாரம் செய்யும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர்,

தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி கரூர் மனோகரா கார்னரில் இறுதி கட்ட பிரசாரத்தினை நிறைவு செய்வதில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு வழங்கிய இறுதிகட்ட தேர்தல் பிரசார அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் இது தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விசாரணை நடத்தி விட்டு, தங்களுக்கு 16-ந்தேதி (இன்று) மாலை 4 மணி முதல் 6 மணி வரை மனோகரா கார்னரில் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட அ.தி.மு.க.வினர் திரண்டு வந்தனர். பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனிடம் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிரசார நேரத்தில் பிரசாரத்தை நடத்த அனுமதிக்குமாறு மனு கொடுத்தனர்.

பின்னர் வெளியே வந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் அ.தி.மு.க. வேட்பாளரின் இறுதி கட்ட பிரசாரத்தை இன்று வெங்கமேடு அண்ணா சிலையில் இருந்து தொடங்கி, கரூர் மனோகரா கார்னரில் முடிக்க கடந்த 12-ந்தேதி தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்றுள்ளோம். தேர்தல் அதிகாரிகள் எங்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நேரம் ஒதுக்கியுள்ளனர். இந்த நிலையில் மற்றவர்களுக்கு (காங்கிரஸ் வேட்பாளர்) எப்படி அதே மனோகரா கார்னரில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது எப்படி என்று புரியவில்லை. எங்களிடம் தேர்தல் அதிகாரிகள் நேரம் மாற்றுவது தொடர்பாக எந்த ஆலோசனையும் கேட்கவில்லை. எங்களுக்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே வழங்கிய அனுமதியின்படி, திட்டமிட்டபடி இன்று இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே நேரத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ் என இருகட்சிகளுக்கும் பிரசார அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனிடம் கேட்ட போது, இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இன்று மதியத்துக்குள் உரிய முடிவு எடுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இறுதி கட்ட பிரசாரத்தை ஒரே இடத்தில் மேற்கொள்ள முண்டியடித்து வருவது கரூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறுதி கட்ட பிரசாரத்தில் அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழாத வகையில் அங்கு போலீஸ் பாதுகாப்பினை பலப்படுத்தவும் மாவட்ட காவல் துறையினர் ஆலோசித்து வருகின்றனர். 

Next Story