வாக்காளர்கள் ஓட்டுப்போட கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன? கலெக்டர் சிவராசு தகவல்


வாக்காளர்கள் ஓட்டுப்போட கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன? கலெக்டர் சிவராசு தகவல்
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 8:54 PM GMT)

தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டுப்போட கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன என்பது குறித்து கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி,

தமிழகத்தில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,531 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22 லட்சத்து 46 ஆயிரத்து 179 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட பின் சேர்க்கப்பட்ட பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

இந்தநிலையில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ‘பூத் சிலிப்’ வழங்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ‘பூத் சிலிப்’ வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடிகளில் அடையாள சான்றாக பயன்படுத்த இயலாது. வாக்காளர் அடையாள அட்டையினை கொண்டு வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை வாக்குச்சாவடிக்கு எடுத்து வந்து ஓட்டுப்போடலாம்.

1) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), 2) ஓட்டுனர் உரிமம், 3) பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள், மத்திய/மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்), 4) கணக்கு புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), 5) வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), 6) ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது), 7) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணிஅட்டை, 8) மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது, 9) ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), 10) அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற, சட்டமன்ற பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது), 11) ஆதார் அட்டை.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்கினை நேர்மையான முறையில் கண்ணியத்துடன் அளித்திட வேண்டும். மேலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story