கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் உம்மன்சாண்டி பேட்டி


கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் உம்மன்சாண்டி பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 4:45 AM IST (Updated: 16 April 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறினார்.

குழித்துறை,

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி நேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அவர், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பிறகு அவர் மார்த்தாண்டம் காஞ்சிரகோட்டில் உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாடாளுமன்ற தேர்தல் முக்கியமானது ஆகும். வலுவான ஜனநாயகம் மற்றும் மதசார்பற்ற தன்மைக்கும், மோடியின் தலைமையிலான பா.ஜனதாவின் மதவாதத்துக்கும் எதிரான போராட்டமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டாக மோடியின் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவிட்டது.

மோடியின் ஆட்சியில் இந்தியா சாதி, மத பிரச்சினைகளால் பிளவுபடும் நிலையில் உள்ளது. பா.ஜனதா கட்சி நாட்டின் ஒற்றுமைக்கும், மத சார்பின்மைக்கும் எதிராக செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள எல்லா மக்களும், குறிப்பாக இளைஞர்கள் ராகுல்காந்தி தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, இந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ராகுல்காந்தி நாட்டின் பிரதமர் ஆவார். வயநாடு தொகுதியிலும் ராகுல்காந்தி அதிக வாக்கு பெற்று வெற்றி பெறுவார்.

காங்கிரஸ் கட்சி தேசிய ஒருமைபாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளது. அதனால், பிற மத சார்பற்ற கட்சிகளுடனும், இடது சாரிகளுடனும் இணைந்து செயல்படுகிறோம். கேரளாவில் நாங்களும், இடது சாரிகளும் எதிர்த்து போட்டியிடுவதால் எந்த பிரச்சினையும் எழவில்லை. தேசிய அளவில் அந்தந்த மாநிலத்துக்கேற்ப கூட்டணி அமைத்துள்ளோம்.

ரபேல் விவகாரத்தில் ராகுல் கேள்விகள் கேட்டுள்ளார். அதற்கு மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை. அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒரு வெளிநாடு வரிச்சலுகை அளித்திருப்பது, புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இந்திய தேர்தல் கமிஷனை மோடி அரசு பின்னால் இருந்து இயக்குகிறது.

சபரிமலை விவகாரத்தை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. நடுநிலையுடன் அதை கையாண்டு வருகிறோம். கேரளாவை ஆளும் அரசு நீதிமன்றத்தில் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறது. ஆனால், பா.ஜனதா சபரிமலை பிரச்சினையை அரசியல் ஆக்குவதுடன் நடித்து வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்கள் குறிக்கோள். அதன்படி தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அதிக ஓட்டுடன் வெற்றி பெறுவார். முல்லை பெரியாறு அணை தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களுக்கு பெரும் பயனளிப்பதாகும். நாங்கள் பிற மாநிலங்களுடன் நல்ல உறவுடன் இருக்க விரும்புகிறோம். எனவே, முல்லை பெரியாறு முறையை பாதிப்பில்லாமல் கையாள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஊடகப்பிரிவு தேசிய செயலாளர் ரமணி, மாவட்ட பொறுப்பாளர் பெனடிக்ட், மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story