தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு அராஜகம்– கட்டப்பஞ்சாயத்து மட்டுமே தெரியும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு அராஜகம்– கட்டப்பஞ்சாயத்து மட்டுமே தெரியும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 9:28 PM GMT)

தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு அராஜகம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து மட்டுமே தெரியும் என பவானியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டிப்பேசினார்.

பவானி,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவு தெரிவித்து பவானி அந்தியூர் பிரிவு சாலையில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்த தேர்தல். இது விவசாயிகளுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் இடையே நடக்கிற போட்டி. அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் நரேந்திர மோடி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இதேபோல் தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன் ஆகியோரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

ஆனால் எதிர் அணியில் தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் பெரும் முதலாளிகள். அவர்களுக்கு விவசாயம் மற்றும் விவசாயம் சேர்ந்த எந்த தொழில்களும் தெரியாது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, தகராறு செய்வது மட்டுமே தெரியும். தற்போது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து தமிழகத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கோதாவரி– காவிரி இணைப்பு திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் கூடுதலாக தலா 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இது ஒரு முத்தான திட்டம். இதன்காரணமாக விவசாயம் செழிக்கும்.

இதேபோல் பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளுக்கு நீர்வளத்தை பெருக்குவதற்கான திட்டத்துக்கும், மணியாச்சி பள்ளம் ஓடை நீர் திட்டத்துக்கும் தமிழக அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

1924–ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜசாகர் அணை மட்டுமே இருந்தது. வேறு எந்த அணைகளும் இல்லை. கடந்த 1969–ல் தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்– அமைச்சராக இருந்தபோது தான் கர்நாடகத்தில் கபினி, ஹேமாவதி, சொர்ணவதி போன்ற அணைகளை கர்நாடக மாநில அரசு கட்டி 104 டி.எம்.சி. தண்ணீரை தேக்கியது. ஆனால் தமிழகத்தில் மேட்டூர் அணையில் 94 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தேக்கம் செய்யப்பட்டது. வேறு எங்கும் அணைகள் கட்டப்படாததால் தமிழகம் நீர் மேலாண்மையை இழந்துவிட்டது. இதன்காரணமாக தண்ணீர் பற்றாக்குறையால் இன்று விவசாயிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க. கை கோர்த்து நீட் தேர்வுக்கு கையொப்பம் போட்டு விட்டு, இன்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்போம் என்று கூறுகிறது. இதேபோல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு போன்ற திட்டங்களுக்கும் கையொப்பம் போட்டுவிட்டு இன்று எதிர்ப்பு தெரிவிப்பதும் அதே தி.மு.க. தான். கர்நாடகாவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி சென்றபோது மேகதாது அணையை கட்டுவோம் என்கிறார். இது தமிழர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story