ஈரோடு ஆர்.என்.புதூரில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் அடிப்படை வசதி கேட்டு நடந்தது
ஈரோடு ஆர்.என்.புதூரில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு ஆர்.என்.புதூர் சொட்டையம்பாளையம் வயக்காட்டு பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்க கோரியும், குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கோரிக்கை மனுவுடன் சேர்த்து அங்குள்ள புகார் பெட்டியில் போட்டனர். அப்போது அவர்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தங்களது முடிவை தெரிவித்தனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் நேற்று தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தினர். மேலும், அந்த பகுதியில் திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முகத்தில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும், கருப்பு கொடியை கையில் ஏந்திய படியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:–
ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலம் 4–வது வார்டுக்கு உள்பட்ட எங்களது பகுதியில் நாங்கள் சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். பல முறை ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு செய்து இருக்கிறோம். இதற்காக எங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டோம். மேலும், எங்களது வாக்கு உரிமையை ரத்து செய்துவிடும்படியும் மனு கொடுத்து இருக்கிறோம்.
குடிநீர் வசதி கூட இல்லாததால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். தண்ணீர் பிடிக்க 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதேபோல் சாலை வசதியும் கிடையாது. ஒருசிலர் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாததால் இந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டனர். மேலும், வீட்டுமனை பட்டா இல்லாததால் ஒரே வீட்டில் 2, 3 குடும்பத்தினர் வசிக்கும் நிலையும் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதியை செய்துகொடுக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.