மாவட்ட செய்திகள்

கோபி அருகே பரிதாபம்; குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு + "||" + 2 students die sink in the pond

கோபி அருகே பரிதாபம்; குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

கோபி அருகே பரிதாபம்; குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
கோபி அருகே குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
கடத்தூர்,

சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளியை சேர்ந்தவர் வேலுச்சாமி. அவருடைய மகன் நந்தகுமார் (வயது 16). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கதிரேசன் (14). இதில் நந்தகுமார் 10-ம் வகுப்பும், கதிரேசன் 9-ம் வகுப்பும் படித்து தேர்வு எழுதி உள்ளனர். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.


கோடை விடுமுறையையொட்டி 2 பேரும் கோபி அருகே கருதாம்பட்டிபுதூரில் உள்ள உறவினர் லட்சுமணன் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இந்த நிலையில் நந்தகுமாரும், கதிரேசனும் திடீரென நேற்று மதியம் 12 மணி அளவில் குளிப்பதற்காக அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு நடந்து சென்றனர். அங்கு 2 பேரும் குட்டையில் இறங்கி ஆனந்தமாக குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் திடீரென குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதில் சிறிதுநேரத்தில் நந்தகுமாரும், கதிரேசனும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே வெகுநேரமாகியும் 2 பேரும் வீடு திரும்பாததால் லட்சுமணன் அவர்களை தேடினார். அப்போது குட்டைக்கு சென்று பார்த்தார். அங்கு 2 பேரும் குட்டையில் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குட்டையில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.