வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 9:50 PM GMT)

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை கலெக்டர் சிவஞானம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல், சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மற்றும் சிவகாசி சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவஞானம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 1283 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 1371 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தித்திலும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 283 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 2115 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 276 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 1343 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 1232 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 252 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 1217 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியிலும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 273 வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள 1304 வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு காரியாபட்டி நாசியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பயிற்சி நடைபெற்றது.

அப்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடைமுறைகள், மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் காகித தணிக்கை எந்திரங்களை இணைக்கும் முறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறைகள், வாக்குப்பதிவு நடைபெற வேண்டிய வழிமுறைகள் மற்றும் பதிவேடுகளை பராமரித்தல், வாக்குப்பதிவு நடைபெறும் நாளிலும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாட்களிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விருதுநகர் கிளை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் சம்மந்தமான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று கலெக்டர் அலுவலக வளாகம் வந்த விழிப்புணர்வு பேருந்து வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவஞானம் பார்வையிட்டு விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், தேர்தல் வட்டாட்சியர் லோகநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விருதுநகர் கிளை வணிகத்துணை மேலாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story