பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தகவல்


பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு தேர்தல் அதிகாரி வீரராகவ ராவ் தகவல்
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 15 April 2019 9:55 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:– ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,916 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக சாய்வுதள வசதி, சக்கர நாற்காலி வசதி போன்ற சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் எண்ணிக்கையினை பொறுத்தவரையில் 7,75,765 ஆண் வாக்காளர்களும், 7,82,063 பெண் வாக்காளர்களும், 82 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15,57,910 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு வினியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் வாக்குப்பதிவிற்காக 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 4,577 வாக்குச்செலுத்தும் கருவிகளும், 2,299 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,499 வாக்காளர் சரிபார்க்கக்கூடிய எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் வேட்பாளர்களது பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 792 வாக்குச்சாவடி மையங்களில் வெப்கேமரா முறையில் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3 கம்பெனி துணை ராணுவ படையினரும், 200–க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல்படை வீரர்களும் வருகை தந்துள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு நிறைவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும். இதன்படி இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணிக்குமேல் அரசியல் கட்சி பிரதிநிதிகள், வேட்பாளர்கள் எவ்விதமான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story