பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை


பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 15 April 2019 10:45 PM GMT (Updated: 15 April 2019 10:01 PM GMT)

பயிர் இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள வெண்ணத்தூர், மேட்டுக்கொல்லை, சம்பை, பாப்பனேந்தல், முத்துரெகுநாதபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விவசாயிகள் இதுகுறித்து கூறியதாவது:– மேற்கண்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழை இல்லாத காரணத்தினால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017–18–ம் ஆண்டிற்கு பயிர்காப்பீடு செய்துள்ளோம்.

தற்போது மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் மேற்கண்ட கிராம விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கடந்த 8–ந் தேதி நேரில் சந்தித்து முறையிட்டபோது ஒருவாரத்தில் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால், மற்ற பகுதிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளதோடு, வாங்கிய விவசாய கடனை கட்ட முடியாமல் அவதிஅடைந்து வருகிறோம்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பயிர்காப்பீடு இழப்பீடு தொகை முழுமையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கடன் வாங்கி விவசாயம் செய்து பயிர்காப்பீடு செய்துள்ள நிலையில் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் கலெக்டரை சந்தித்து தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

முதுகுளத்தூர் தாலுகா இளங்காக்கூர், உலையூர், பிரபுக்களுர், பொக்கனாரேந்தல், கையகம், அணிகுருந்தன், பொன்னக்கனேரி, மீசல் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்றுகாலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து முற்றுகையிட்டு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் கூறியதாவது:– 13 கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்து 1,500–க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படாததால் அனைவரும் வறுமையில் வாடி வருகிறோம். இதுதொடர்பாக பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். 15 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story