மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள் - மோடியின் சகோதரர் பேட்டி


மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள் - மோடியின் சகோதரர் பேட்டி
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 10:01 PM GMT)

மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக ராமேசுவரத்தில் மோடியின் சகோதரர் கூறினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்துக்கு மோடியின் சகோதரர் பங்கஜ்பாய் மோடி நேற்று வருகை தந்தார். பின்னர் அவர் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர் கோவிலில் உட்புறம் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு சுவாமி–அம்பாளை தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடிக்கு சென்று இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தை பார்வையிட்டதுடன், புயலால் அழிந்துபோன கட்டிடங்களை சுற்றிப்பார்த்தார். பின்பு அங்கிருந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டுக்கு சென்றார். அங்கு அப்போது அவரை கலாமின் அண்ணன் மகன் ஜெய்னுலாபுதீன், பேரன் சேக் சலீம் ஆகியோர் வரவேற்றனர்.

அங்கு கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அதுசமயம் கலாம் எழுதிய புத்தகங்களில் ஒன்றை பங்கஜ்பாய் மோடிக்கு முத்து மீரா லெப்பை மரைக்காயர் நினைவு பரிசாக வழங்கினர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிவகாமி நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார்.

அதனை தொடர்ந்து பங்கஜ்பாய் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:– எனது சகோதரர் மோடி 5 முறை குஜராத் மாநிலத்தில் முதல்–அமைச்சராக இருந்துள்ளார். அவர் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாதவர். 19 ஆண்டு கால அவரது நிர்வாகத்தில் எந்த புகார்களும் கிடையாது. மக்கள் அவர் மீது நல்ல அபிப்ராயத்துடன் உள்ளனர். கடந்த 2014–ம் ஆண்டு வெற்றி பெற்றதை விட தற்போது அதிக பலத்தோடு பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மீண்டும் மோடி தலைமையில் மத்திய அரசு அமைவது உறுதியாகி விட்டது.

தமிழகத்தில் அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி உறுதியாக 30–க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர். நான் வெகுநாட்களாக கலாம் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்தேன். அவர்களை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அவருடன் பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன் வந்திருந்தார்.


Next Story