பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு


பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம் - ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 10:10 PM GMT)

பா.ஜனதா ஆட்சியில் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

மானாமதுரை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து இடைக்காட்டூரில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளோம். 50 ஆயிரம் குறுந்தொழில்கள் முடங்கிவிட்டன. கடந்த 5 ஆண்டுகளில் கல்வி கடன் யாருக்கும் வழங்கப்படவில்லை.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பா.ஜ.க. கூறியது, ஆனால் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட எந்த விவசாயிகளின் வருமானமும் இரட்டிப்பாகவில்லை. கடன் தான் இரட்டிப்பாகி உள்ளது. நாட்டில் 8 மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு செல்வாக்கு கிடையாது. பா.ஜ.க.வை எதிர்ப்பதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, கஜா புயல் உள்ளிட்ட எதையும் பா.ஜனதா அரசு கண்டு கொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். சிவகங்கை தொகுதியில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் கணேசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வீதி வீதியாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, வர்த்தகர்களுக்கு பா.ஜனதா அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ன என்பது தெரியும். இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நாளிலிருந்து இன்று வரை மீளமுடியாத அளவிற்கு உள்ளது. 86 சதவீத நோட்டுகளை இரவோடு இரவாக செல்லாது என அறிவித்தது உலக பொருளாதாரத்தில் கேலிக்கூரிய விசயமாகும்.

ஜிஎஸ்டி வரி என்பது யாருக்குமே புரியாத வரியாக உள்ளது. இதனால் தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளக. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், தனியார் துறை மூலம் அதிக அளவில் இந்த பகுதியில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு, மிண்ணமலைப்பட்டி, உரத்துப்பட்டி, குன்னத்தூர், கணபதிபட்டி, பிரான்பட்டி, நாகமங்கலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.பாலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் கை சின்னத்திற்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் வாக்குகள் சேகரித்தார். அதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story