பிரதமர் மோடி உத்தரவுப்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு


பிரதமர் மோடி உத்தரவுப்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது  - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 April 2019 10:15 PM GMT (Updated: 15 April 2019 10:12 PM GMT)

பிரதமர் மோடி உத்தரவுப்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரசார கூட்டம் மண்டியா தொகுதியில் உள்ள பாண்டவபுராவில் நேற்று நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவா் அமித்ஷா ஆகியோர், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களை அடக்க முயற்சி செய்கிறார்கள். விசாரணை அமைப்புகளை சுதந்திரமாக செயல்பட மோடி அனுமதிக்கவில்லை.

பிரதமர் மோடியின் உத்தரவுப்படி தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இந்த தேர்தலில் மோடி படுதோல்வி அடைவார். மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பாரபட்சமற்ற முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் மோடி தோல்வி அடைந்துவிட்டார். மோடி, நாட்டின் ஆட்சி முறையை சீரழித்துவிட்டார்.

மோடி இதுவரை பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்தியதே இல்லை. நாட்டில் மோடியைவிட நல்ல தலைவர்கள் உள்ளனர். மோடி தலைமையிலான ஆட்சியில் ஜனநாயகம் தற்ேபாது ஆபத்தில் உள்ளது. மோடியை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டியுள்ளார்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை தொலைவில் வைக்க வேண்டும் என்ற காரணத்தால் தான் முன்பு தேவேகவுடாவை பிரதமராக்கினோம். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பா.ஜனதா குறுக்கு வழியில் முயற்சி செய்து வருகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது. மன்மோகன்சிங், தேவேகவுடா ஆகியோர் பிரதமராக இருந்தபோது, நல்லாட்சி நிர்வாகத்தை வழங்கினர். நல்ல திட்டங்களை அமல்படுத்தினர். நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்தது.

இந்த ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. நாட்டை காப்பாற்ற கர்நாடக மக்கள், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். கர்நாடகத்திற்காக மோடி எதையும் செய்யவில்லை.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

இதில் முதல்-மந்திரி குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கன்னடத்தில் பேசத்தொடங்கிய சந்திரபாபு நாயுடு, பிறகு தெலுங்கில் பேசினார்.

நிகில் குமாரசாமியை எதிர்த்து போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுமலதா, நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்று ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் கூறி வந்தனர். அந்த தொகுதியில் நாயுடு சமூக மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கிறார்கள். இந்த நிலையில் அதே சமூகத்தை சேர்ந்த சந்திரபாபு நாயுடுவை ஜனதா தளம்(எஸ்) கட்சி அழைத்து வந்து பேசவைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story