திருமூர்த்தி அணையில் இருந்து 4–ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் மனு


திருமூர்த்தி அணையில் இருந்து 4–ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 10:23 PM GMT)

திருமூர்த்தி அணையில் இருந்து 4–ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன திட்டம் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரால் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் தண்ணீரின்றி தவித்து வந்து கொண்டிருக்கிறோம். பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து 3–ம் மண்டலத்திற்கு 4–ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறது.

இதனால் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகிறோம். இருப்பினும் அதிகாரிகள் தண்ணீர் திறந்து விடாமல் இருந்து வருகிறார்கள். காலதாமதம் செய்கிறார்கள். இதன் காரணமாக இந்த தண்ணீரை நம்பி விவசாயம் செய்துள்ள வெங்காயம் உள்பட காய்கறி பயிர்கள் பல கருகும் நிலையில் உள்ளன.

எனவே விவசாயிகளின் இந்த சூழ்நிலையை மாவட்ட கலெக்டர் புரிந்துகொண்டு உதவி செய்ய வேண்டும். கருகும் பயிர்களை காப்பாற்ற 3–ம் மண்டலத்திற்கு 4–ம் சுற்றுக்கு தண்ணீர் திறந்துவிட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story