மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு


மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 April 2019 4:15 AM IST (Updated: 16 April 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் மதியழகன் நகரை சேர்ந்தவர் நாகராஜ், கூலித்தொழிலாளி. இவரது மகன் அஜய் (வயது 9). இவன் கணியூரில் உள்ள அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் இவர்கள் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இவர்கள் உறவினரான தாராபுரத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் தனது மகன் சந்தோசுடனும் (9) மற்றும் கணியூர் காந்திவீதியை சேர்ந்த அம்சவேணி என்பவர் தனது மகன் ஜீவானந்தம் (9) ஆகியோருடனும் வந்திருந்தனர். சிறுவர்கள் சந்தோஷ், ஜீவானந்தம் இருவரும் 5–ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 3.30 மணி அளவில் சிறுவர்கள் அஜய், சந்தோஷ், ஜீவானந்தம் மற்றும் கணியூரை சேர்ந்த ஆறுக்குட்டி என்பவரது மகன் கரிகாலன் (9) ஆகியோர் கழிப்பிடம் செல்வதற்காக ஊருக்கு வெளியே தேவேந்திர வீதி அருகே ஒதுக்குப்புறமாக பயனற்ற நிலையில் உள்ள சுமார் 30 அடி ஆழ சுற்றுச்சுவர் இல்லாத கிணற்று பக்கம் சென்றனர்.

பின்னர் மாணவர்கள் 4 பேரும் அந்த கிணற்றில் கால்களை கழுவுவதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி மாணவர்கள் 3 பேரும் கிணற்றில் விழுந்தனர். மாணவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் கிணற்று நீரில் மூழ்கினார்கள். இதை பார்த்த சிறுவன் கரிகாலன் கூச்சல் போட்டான். ஆனால் அந்த பகுதியில் உதவிக்கு யாரும் இல்லாததால் ஊருக்குள் சென்று குடும்பத்தினரிடம் கரிகாலன் தகவல் தெரிவித்தான்.

அதன் பேரில் மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து உடுமலை தீயணைப்பு நிலைய அதிகாரி அரிராமகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் மாலை 5.30 மணி அளவில் அங்கு வந்தனர். அதுபோல் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அத்துடன் 108 ஆம்புலன்சும் அங்கு வந்தது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு மூலம் சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் ஆகியும் மாணவர்கள் பற்றிய கதி என்ன என்று தெரியாததால் அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

எனவே கிணற்றுக்குள் இறங்கி மாணவர்களை தேடாத தீயணைப்பு துறையினரை கண்டித்தும், துரிதமாக செயல்படாத போலீசாரை கண்டித்தும் மாணவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் மடத்துக்குளம்–கணியூர் சாலையில் உள்ள புதூர்மடம் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அழைத்துவந்தனர்.

இதற்கிடையில் அங்கு இருள் சூழதொடங்கியதால் அந்த பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு பெற்று விளக்குகள் பொருத்தி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரவு 7.30 மணி அளவில் 2 மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றொரு மாணவனை தேடும் பணி தொடர்ந்து நீடித்தது.

மேலும் மோட்டார் மூலம் கிணற்று நீரை வெளியேற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. பின்னர் மாணவர்களின் உடல்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சு மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story