1,983 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிக்கப்படும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி


1,983 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிக்கப்படும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 16 April 2019 10:15 PM GMT (Updated: 16 April 2019 5:34 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் 1,983 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை,

பெருநகர மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் மற்றும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் சென்னை மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், போலீஸ் இணை கமிஷனர் தினகரன், மகேஷ்குமார் அகர்வால், பெருநகர சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் லலிதா, துணை கமிஷனர் கோவிந்தராவ், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஸ்ரீதர், ஜார்ஜ், பிரியதர்ஷனி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் கோ.பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மொத்தம் 38 லட்சத்து 66 ஆயிரத்து 66 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 19 லட்சத்து 5 ஆயிரத்து 216 ஆண் வாக்காளர்களும், 19 லட்சத்து 59 ஆயிரத்து 862 பெண் வாக்காளர்களும், 988 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட மாவட்டம் சென்னை ஆகும். இங்கு 77 சதவீதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரால், உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடியே 60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் தகுந்த ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யப்பட்ட ரூ.62 லட்சத்து 93 ஆயிரத்து 334 உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் 142 கிலோ தங்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 128 கிலோ தங்கம் தக்க ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களில் 4,313 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் 2 ஆயிரத்து 560 பேர் தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். 1,764 பேருக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 227 புகார்கள் பெறப்பட்டு, அதில் 178 புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு உள்ளது. மேலும் ‘சி.விஜில்’ செயலி மூலம் 166 புகார்கள் பெறப்பட்டு, அனைத்து புகார்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள 3,754 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்தன. இதில் 1,983 வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டு வாக்குப்பதிவை இந்திய தேர்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடிகள் சட்டமன்ற தொகுதிக்கு தலா ஒன்று என்ற வீதத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தொகுதிக்கு 4 மாதிரி வாக்குப்பதிவு மையங்களும் நிறுவப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் வகையில், 913 இடங்களில், 18 வயதுக்கு உட்பட்ட என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 15 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். மேலும் ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 கம்பெனி துணை ராணுவம் மற்றும் ஆந்திரா சிறப்பு போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர்.

62 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 106 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story