“தமிழகத்தில் சுட்டெரிக்கிற வெயிலில் தாமரை மலர வாய்ப்பே இல்லை” கனிமொழி எம்.பி. பிரசாரம்


“தமிழகத்தில் சுட்டெரிக்கிற வெயிலில் தாமரை மலர வாய்ப்பே இல்லை” கனிமொழி எம்.பி. பிரசாரம்
x
தினத்தந்தி 16 April 2019 10:15 PM GMT (Updated: 16 April 2019 6:57 PM GMT)

“தமிழகத்தில் சுட்டெரிக்கிற வெயிலில் தாமரை மலர வாய்ப்பே இல்லை“ என்று கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

தூத்துக்குடி, 

“தமிழகத்தில் சுட்டெரிக்கிற வெயிலில் தாமரை மலர வாய்ப்பே இல்லை“ என்று கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார்.

இறுதிக்கட்ட பிரசாரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தில் தொடங்கினார். பின்னர் அவர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஆறுமுகநேரி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின்போது கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

கருத்து சுதந்திரம்

மத்திய பா.ஜனதாவின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் குழி தோண்டி புதைக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர்கள், பகுத்தறிவாதிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் தமிழர்களின் தொன்மையான நாகரிகம், வெளி உலகுக்கு பறைசாற்றப்படாமல் மறைக்கப்பட்டு உள்ளன. தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. காவிரி விவகாரம், முல்லை பெரியாறு போன்ற பிரச்சினைகளில் தமிழர்களின் உரிமைகள், நலன்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

மத்திய பா.ஜனதா அரசுக்கு அடிமையாக தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சவால் விட்டார். தற்போது மோடிதான் எங்கள் டாடி என்று அ.தி.மு.க.வினரே கூறுகின்றனர்.

2-வது சுதந்திர போர்

தமிழகத்தில் வறட்சி, புயல், வெள்ளம் பாதிப்பு வந்தபோதும், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் அனுதாபம்கூட தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தேர்தலுக்காக தமிழகத்துக்கு 5 முறை வந்து விட்டார். புலவாமா தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்து கொண்டிருந்தார்?

தமிழகத்தில் சுட்டெரிக்கிற வெயிலில் தாமரை மலர வாய்ப்பே இல்லை. தற்போது உதயசூரியன் உச்சிசூரியனாக பிரகாசித்து கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜனதா அரசையும், அதன் அடிமை அ.தி.மு.க. அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. பாசிச பா.ஜனதாவின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற 2-வது சுதந்திர போருக்கு தயாராகுங்கள். நான் என்றும் உங்களுடனே இருந்து உங்களுக்காக பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

அப்போது தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடியில்...

இதைத்தொடர்ந்து, முத்தையாபுரம், தூத்துக்குடி வட்டக்கோவில், சுந்தரவேலு நகர், ஸ்டேட் வங்கி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். வட்டக்கோவில் பகுதியில் அவர் பேசியதாவது:-

இந்த தேர்தல் நம்முடைய அடையாளம், சமூக நீதி, சுயமரியாதைக்கு வந்திருக்கும் சோதனையான தேர்தல். இந்த தேர்தல் ஒரு போராட்ட களம். காரணம் எதிராக நிற்கக்கூடியவர்கள் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.. சமூகத்தில் மக்களுக்கு மரியாதை, சம உரிமை கிடைக்க வேண்டும் என்று நாம் போராடி கொண்டு வருகிறோம். ஆனால் இதற்கு எதிரானவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அ.தி.மு.க. அழைத்து வந்திருக்கிறது.

சூரியனுக்கே இடம்

சமூக வலைதளங்களில் ‘பேக் அப் மோடி’ எனும்சொல் தான் தற்போது பிரபலமாகி வருகிறது. இதற்கான அர்த்தம் மோடி தனது ஆட்சியை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என்பதுதான். மோடியை வீட்டுக்கு அனுப்பினால் போதும் இங்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும், வீட்டுக்கு சென்றுவிடும். எனவே மோடியை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வெற்றியை தான் தூத்துக்குடி மக்கள் பெற்றுதர வேண்டும். தூத்துக்குடியில் சூரியனுக்கு மட்டும் தான் இடம். அடிக்கின்ற வெயிலுக்கு கடலில் இல்லை, தாமரை எங்கும் மலராது. கருகி போய்விடும்.

மாசில்லா தொழிற்சாலைகள்

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூட வேண்டும் என அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொலை செய்தனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 13 பேர் கொலைக்கு நியாயம் வழங்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம். தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தாத நல்ல தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். மக்களுக்கு பயன் தரக்கூடிய ஆலைகள் அமைக்கப்படும். இந்த தேர்தலில் 40-ம் நமதே, நாடும் நமதே, தமிழ்நாடும் நமதே என மாற்றி காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

Next Story