நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்


நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 16 April 2019 11:00 PM GMT (Updated: 16 April 2019 7:47 PM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திருவிடைமருதூர்,

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் நேற்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியை வெளிநாட்டில் வாழும் இந்திய பிரதமர் என்று கூறலாம். அவர் இந்தியாவில் இருந்ததை விட வெளிநாட்டில் இருந்தது தான் அதிகம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார். ஆனால் 10 கோடி பேர் வேலை இழந்தது தான் மிச்சம்.

ஜி.எஸ்.டி. வரியால் இந்தியாவில் சிறு தொழில்கள் அழிந்து விட்டன. பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் 150 பேர் உயிரிழந்தார்களே தவிர, வேறு எந்த பயனும் கிடைக்கவில்லை. நீட் தேர்வினால் அனிதாவின் உயிரை இழந்தோம். இவற்றிற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி. அவரை பழிவாங்க நமக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற செய்வதே.

மோடிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது. அவர் நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. கஜா புயல் வந்தபோது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. கல்விக்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை நிறைவேற்றுவோம்.

டெல்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து, கோரிக்கைகளை என்னவென்று கூட கேட்கவில்லை. ஆகவே மோடியை வீட்டுக்கு அனுப்ப, ராமலிங்கத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். மோடி வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் காற்றோடு காற்றாக கலந்து விடுவார்கள்.

காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. எனவே தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க மக்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

பிரசார நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி. செழியன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், அம்பிகாபதி, அண்ணாதுரை, திருவிடைமருதூர் ஒன்றிய பொறுப்பாளர் சுந்தரஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story