பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 9:45 PM GMT (Updated: 16 April 2019 8:26 PM GMT)

பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர், 

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து வாகனங்களுக்கான உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. பெங்களூரு வழியாக வேலூர் நோக்கி அந்த கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. அதனை வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஓசிம் (வயது 40) என்பவர் ஓட்டினார். மாருதி (30) என்பவர் கிளனராக இருந்தார். நேற்று அதிகாலை 6 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது அதற்கு முன்னால் ஒரு கார் சென்றது. கார் டிரைவர் ‘திடீர்’ என்று பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கன்டெய்னர் லாரி அதன் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டு டிரைவர் நிறுத்த முயன்றார். ஆனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி வலதுபுறமாக ரோட்டில் கவிழ்ந்தது. இதனால் சுமார் 50 அடி தூரத்திற்கு ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கம்பிகள் உடைந்தன. லாரி டிரைவர் ஓசிமிற்கு லேசான காயம் ஏற்பட்டது. கிளனர் மாருதி, காயமின்றி தப்பினார்.

இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சென்று போக்குவரத்தை சர்வீஸ் ரோடு வழியாக மாற்றிவிட்டனர். அதன்பின்னர் மேம்பால சாலையில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரியை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தினர்.

இந்த விபத்து காரணமாக பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

சாலையின் வலதுபக்கமாக லாரி கவிழாமல், இடதுபக்கமாக கவிழ்ந்திருந்தால் பாலத்தில் இருந்து லாரி கீழேவிழுந்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக கன்டெய்னர் லாரி வலதுபக்கமாக கவிழ்ந்துள்ளது.

Next Story