கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு


கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 16 April 2019 11:30 PM GMT (Updated: 16 April 2019 8:45 PM GMT)

கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் பகிரங்க தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

பெங்களூரு, 

இந்திய நாடாளுமன்ற தேர்தல் தேசிய அளவில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தல்

இதில் முதல்கட்ட தேர்தல் நிறைவடைந்துவிட்டது. கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக வருகிற 18, 23-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

இதில் முதல்கட்ட தேர்தல் பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, மைசூரு, உடுப்பி- சிக்கமகளூரு, சித்ரதுர்கா, தட்சிண கன்னடா, ஹாசன் ஆகிய 14 தொகுதிகளில் நடக்கிறது.

கிருஷ்ண பைரேகவுடா

இந்த தொகுதிகளில் முக்கியமாக துமகூரு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, அவரை எதிர்த்து சுயேச்சையாக நடிகை சுமலதா, பெங்களூரு வடக்கில் பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி சதானந்தகவுடா, அவரை எதிர்த்து மாநில மந்திரி கிருஷ்ண பைரேகவுடா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அதேபோல் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்பமொய்லியும், அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி பச்சேகவுடாவும் களத்தில் உள்ளனர். கோலார் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு

இந்த தொகுதிகளில் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி, முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர்.

இந்த நிலையில் பகிரங்க பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையொட்டி கடைசி நாளில் தலைவர்கள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மண்டியாவில் தனது மகன் நிகில் குமாரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். மண்டியாவில் நேற்று தனது இறுதிக்கட்சி பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.

அமித்ஷா

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று கர்நாடகத்தில் பிரசாரம் செய்தார். தாவணகெரேவில் வாக்கு சேகரித்த அவர் கடைசியாக துமகூருவில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, நேற்று சாம்ராஜ்நகரில் பிரசாரம் செய்தார். கொள்ளேகாலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிறகு குண்டலுபேட்டையில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.

தேவேகவுடா

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தான் போட்டியிடும் துமகூரு தொகுதியில் நேற்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அந்த தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார். இன்று(புதன்கிழமை) வேட்பாளர்கள் வீடு-வீடாக சென்று ஓட்டு சேரிக்கிறார்கள்.

இந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. வெளியூர் நபர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பஸ் வசதி

நாளை தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் மொத்தம் 30 ஆயிரத்து 164 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 2 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

தேர்தல் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களுடன் இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் புறப்படுகிறார்கள். இவர்களுக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு வசதிகள்

அதிகபட்சமாக பெங்களூரு புறநகர் தொகுதியில் 2,672 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக உடுப்பி-சிக்கமகளூருவில் 1,837 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன வசதியையும் தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர்.

பாதுகாப்பு

கர்நாடகத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. நீலமணி ராஜூ நேற்று கூறினார்.

இதுபற்றி பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில் “நாடாளுமன்ற தேர்தல் தினத்தில் 282 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 851 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 1,188 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4,205 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள்-ஏட்டுகள் என்று 42,950 பேர், ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பை சேர்ந்த 40,117 பேர், வனபாதுகாவலர்கள்-வனகண்காணிப்பாளர்கள் என்று 414 பேரும், சிறை வார்டன்கள் 990 பேர் என்று மொத்தம் 90,997 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்றார்.

Next Story