மாவட்ட செய்திகள்

நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முதல் குரல் கொடுப்பேன் திருநாவுக்கரசர் வாக்குறுதி + "||" + The first voice to fulfill the pending projects is the promise of the Thirunavukkaras

நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முதல் குரல் கொடுப்பேன் திருநாவுக்கரசர் வாக்குறுதி

நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முதல் குரல் கொடுப்பேன் திருநாவுக்கரசர் வாக்குறுதி
நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற முதல் குரல் கொடுப்பேன் என்று திருநாவுக்கரசர் வாக்குறுதி அளித்தார்.
திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் நேற்று காலை மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாகனூர், கே.கள்ளிக்குடி, மாத்தூர், அளுந்தூர், தீரன் மாநகர், மேக்குடி, முடிகண்டம், கொட்டப்பட்டு, துரைகுடி, திருமலை சமுத்திரம், ஓலையூர் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.


சாலையோரம் நூறு நாள் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் குடிநீர் பிரச்சினை, சாலைவசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்பாக தங்களது குறைகளை எடுத்துக்கூறினார்கள். இதையடுத்து அந்தந்த கிராமங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து கை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

பிரசாரத்தில் திருநாவுக்கரசர் பேசும்போது, ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாதந்தோறும் விவசாயிகளின் வங்கி கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம், பால் பண்ணை முதல் துவாக்குடி வரையிலான அணுகுசாலை, திருச்சி அரை வட்ட சுற்றுச்சாலை திட்டம் போன்ற பணிகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளன. என்னை வெற்றி பெற செய்தால் இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தான் முதல் குரல் கொடுப்பேன்’ என்று வாக்குறுதி அளித்தார். வேட்பாளருடன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கருப்பையா, இளைஞர் அணி செயலாளர் ஆனந்த், காங்கிரஸ் வட்டார தலைவர் சுந்தரம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர்.

மேலும் வேட்பாளர் திருநாவுக்கரசர் நேற்று புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அவர் புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதி, ராஜகோபாலபுரம், கீழ 3-ம் வீதி, பழைய பஸ் நிலையம், பெரியார்நகர், உழவர் சந்தை, அம்பாள்புரம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் மாலையில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே தனது பிரசாரத்தை நிறைவு செய்து பேசினார். அவர் பேசுகையில், கடந்த 20 நாட்களாக கூட்டணி கட்சியினர், தங்கள் ஒவ்வொருவரையும் வேட்பாளராக கருதி சங்கடமின்றி, மனப்பூர்வமாக பணியாற்றினர். அதுமட்டுமின்றி வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பெட்டியை அனுப்பி வைக்கும்போதும், மே 23-ந் தேதி நாம் வெற்றி பெற்றோம் என்று அறிவிக்கும் வரையிலும் செயல்படும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.ம.மு.க. ஒரு அரசியல் கட்சியே இல்லை. அந்த கட்சியினர் திருச்சி தொகுதியில் மட்டுமின்றி தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறப்போவதில்லை. நான் இத்தனை ஆண்டுகளில் நல்லது செய்திருப்பேனே தவிர, எவருக்கும் துரோகம் செய்ததில்லை. எனவே, என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மேலும், புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாமல் போனது வருத்தத்துக்கு உரியது. தொகுதி மறு சீரமைப்பின்போது மீண்டும் புதுக்கோட்டை தொகுதி உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.