மாவட்ட செய்திகள்

தடை காலம் தொடங்கியது: கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு + "||" + The ban has begun: the fish price rises in the bucket market

தடை காலம் தொடங்கியது: கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு

தடை காலம் தொடங்கியது: கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு
மீன்பிடி தடை காலம் தொடங்கி உள்ளதால் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது.
மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் மற்றும் நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.


மேலும் ராமநாதபுரம், பாம்பன், ராமேசுவரம், தூத்துக்குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கடலில் இருந்து கரை திரும்புவதால் மீன் வரத்து அதிகமாக இருக்கும்.

கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும். இந்த காலங்களில் மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகளில் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும்போது படகுகள் மற்றும் வலைகளில் அடிபட்டு மீன் குஞ்சுகள் அழியும் நிலை உள்ளது. எனவே இந்த காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்து உள்ளது. இந்த நாட்களில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடி தடை காலமானது 45 நாட்களில் இருந்து 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமாக ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் தடை காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மீன்பிடி தடை காலம் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகளை பராமரிக்கும் பணிகளிலும், வலைபின்னுதல், கிழிந்த மடிவலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளிலும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தடை காலத்தில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மடி வலைகளை பயன்படுத்தி கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கணவாய் தூண்டி, முரல்வலை, செங்கனி வலை, கெண்டை வலை, நண்டு வலைகள் போன்றவற்றை பயன்படுத்தி கரையோரங்களில் மீன் பிடிக்கின்றனர். இதனால் மீன் வரத்து குறைந்து உள்ளதால், மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

கட்டுமாவடி பெரிய மீன்மார்க்கெட், மணமேல்குடி மீன் மார்க்கெட் ஆகியவற்றிலும் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது. குறிப்பாக கெண்டை, பாறை, தாளஞ்சிரா, நண்டு, இறால், கணவாய், முரல், செங்கனி போன்ற மீன்களின் விலை உயர்ந்து உள்ளது. இதன்படி ரூ.300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இறால் தற்போது ரூ.450-க்கும், ரூ.250-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நண்டு ரூ.350-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட செங்கனி மீன் ரூ.400-க்கும், ரூ.200-க்கு விற்ற முரல் மீன் ரூ.320-க்கும், ரூ.150-க்கு விற்ற கெண்டை மீன் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஓட்டல்களிலும் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இந்த மீன்பிடி தடை காலத்தில் மடி வலைகள், தரைப்பகுதியை அரிக்கக்கூடிய வலைகளை பயன்படுத்த மட்டுமே தடை செய்யப்பட்டு உள்ளது. தண்ணீரின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய நண்டு வலை, செங்கனி வலை, கெண்டை வலை போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. இதனால் இறால் வரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது. மற்ற வகை மீன்கள் சிறிதளவு மட்டுமே வலையில் சிக்கும். வரத்து குறைந்ததால் மீன்கள் விலை அதிகரித்து உள்ளது. இந்த தடை காலம் முடிந்த பிறகு மீன்கள் விலை குறையும், என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. கட்டண உயர்வால் பயணிகள் அவதி: திருச்சியில் இருந்து முக்கிய ஊர்களுக்கு ரெயில் கட்டண விவரம்
ரெயில் கட்டணம் உயர்வால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து முக்கிய ஊர்களுக்கான ெரயில் கட்டண விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்ந்துள்ளது.
4. அனுமதியின்றி லாரியில் ஏற்றி வரப்பட்ட 21 டன் வெங்காயம் பறிமுதல்
சீர்காழி அருகே அனுமதியின்றி லாரியில் ஏற்றி வரப்பட்ட 21 டன் வெங்காயத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வெங்காயம் கொண்டு வரப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. ‘ஹெல்மெட்’ வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் போட்டி, போட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர்
‘ஹெல்மெட்’ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டதால் பொதுமக்கள் போட்டி, போட்டு வாங்கி சென்றனர்.