பண மதிப்பிழப்பால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர், மோடி தேவேகவுடா கடும் தாக்கு


பண மதிப்பிழப்பால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர், மோடி தேவேகவுடா கடும் தாக்கு
x
தினத்தந்தி 17 April 2019 4:30 AM IST (Updated: 17 April 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் நீதி, தர்மம் செத்துவிட்டது என்றும், பண மதிப்பிழப்பால் மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர் மோடி என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கடுமையாக தாக்கி பேசினார்.

ஹலகூர், 

நாட்டில் நீதி, தர்மம் செத்துவிட்டது என்றும், பண மதிப்பிழப்பால் மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர் மோடி என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கடுமையாக தாக்கி பேசினார்.

மக்கள் கைகோர்க்க வேண்டும்

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஹலகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். அந்த சந்தர்ப்பத்தில் அவர் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய தாவது:-

நாட்டில் ஊழலை முழுமையாக ஒழிக்க கூட்டணி அரசுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும். நாட்டில் பாதுகாப்பான அரசாங்கம் அமைய பா.ஜனதாவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டுள்ளோம்.

மகன்போல செயல்படுவார்

இந்த முறை கர்நாடகத்தில் கூட்டணி அரசு 20 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெற வேண்டும். ஆனால் அது போதாது, நிகில் குமாரசாமியும் அதிக அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல மக்கள் அனைவரும் அவரை ஆசிர்வதித்து, அவருக்கு ஆதரவளிக்க வேண்டும். நிகில் என்னுடைய பேரன் என்பதற்காக நான் இங்கு பிரசாரத்திற்கு வரவில்லை. நிகில் மண்டியா மாவட்டத்தின் மகன். மண்டியா மாவட்ட மக்கள் ஒவ்வொருவரின் வீட்டின் மகன்போல அவர் செயல்படுவார்.

பா.ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி, மோடி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாடி வருகிறார். நாட்டில் நீதி, நேர்மை, நியாயம், தர்மம் அனைத்தும் செத்துவிட்டது. இனவாதம் அதிகரித்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

நாளை ஓட்டுப்பதிவு

விவசாயிகளுக்கு தள்ளுபடி, சலுகைகள் எதுவும் இல்லை. ஊழல் மட்டும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. கருப்பு பணத்தை மீட்பேன் என்று மோடி கூறினார். ஆனால் அது என்ன ஆனது என்று தெரியவில்லை. பண மதிப்பிழப்பால் மத்திய அரசுக்கும், மக்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவர் மோடி.

வருகிற 18-ந் தேதி(அதாவது நாளை) மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதில் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். நிகில் குமாரசாமிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

அவருடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் எச்.விஸ்வநாத், அன்னதாணி எம்.எல்.ஏ., மரிதிப்பே கவுடா எம்.எல்.சி. மற்றும் பலர் நிகில் குமாரசாமிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Next Story