கன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எச்.வசந்தகுமார் நம்பிக்கை


கன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எச்.வசந்தகுமார் நம்பிக்கை
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 9:29 PM GMT)

கன்னியாகுமரி தொகுதியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

குழித்துறை,

கன்னியாகுமரி தொகுதியில் மக்கள் எழுச்சியை பார்க்கும் போது காங்கிரஸ் வேட்பாளரான எனது வெற்றி 100 சதவீதம் உறுதி என்று பணிவுடன் கூறுகிறேன். அதற்கு கூட்டணி கட்சிகளின் கடுமையான உழைப்பு காரணமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகளும் எனக்கு முழுஆதரவு தர முன் வந்துள்ளனர்.

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி அளிக்கக்கோரி பொன்.ராதாகிருஷ்ணன் பிரதமரிடமோ, நாடாளுமன்றத்திலோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் அந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முந்திரி கொட்டைக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதால் முந்திரி ஆலைகள் மூடப்பட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர். அவர்களில் பெண் தொழிலாளர்களே அதிகம். இதனை பொன்.ராதாகிருஷ்ணன் கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசை வலியுறுத்தி மூடப்பட்டுள்ள முந்திரி ஆலைகளை திறக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் அவர் விளையாட்டு அரங்கம் அமைத்து கொடுக்கவில்லை. நான் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன். இந்த குறுகிய காலத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெற ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன். குமரி மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. நெல் மற்றும் தென்னை விவசாயிகளின் நலனுக்காக எதுவும் செய்யப்படவில்லை. மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்கள் முறையாக ஆய்வு செய்து கட்டப்படவில்லை. குமரி மாவட்ட மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தேர்தலில் நான் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story