கொடைக்கானல் அருகே, காட்டெருமைகள் முட்டியதில் குதிரை பலி


கொடைக்கானல் அருகே, காட்டெருமைகள் முட்டியதில் குதிரை பலி
x
தினத்தந்தி 16 April 2019 9:45 PM GMT (Updated: 16 April 2019 9:43 PM GMT)

கொடைக்கானல் அருகே காட்டெருமைகள் முட்டியதில் வீட்டு முன்பு கட்டியிருந்த குதிரை பரிதாபமாக இறந்தது.

கொடைக்கானல், 

கொடைக்கானல் அருகே உள்ள செண்பகனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். விவசாயி. இவர் சொந்தமாக குதிரை ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பாக குதிரையை கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில் திடீரென்று குதிரையின் அலறல் சத்தம் கேட்டது. உடனே தூங்கிக் கொண்டிருந்த ஜான்சன் வெளியே ஓடி வந்தார்.

அங்கு 5 காட்டெருமைகள் குதிரையுடன் சண்டையிட்டு கொண்டிருந்தது. அதில் காட்டெருமைகள் ஆவேசமாக கொம்புகளை கொண்டு முட்டியதில் குதிரையின் வயிறு கிழிந்தது. இதில் சம்பவ இடத்திலேயே குடல் சரிந்து குதிரை பலியானது. பின்னர் அந்த காட்டெருமைகள் அங்கிருந்து சென்றன.

இதுகுறித்து ஜான்சன் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனவர் ராம்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அங்கு கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் ஹக்கீமை வரவழைத்து குதிரையின் உடலை பரிசோதனை செய்தனர். பின்பு அதே பகுதியில் குதிரையின் உடல் புதைக்கப்பட்டது.

செண்பகனூர் பகுதியில் அடிக்கடி காட்டெருமைகள் புகுந்து கால்நடைகளையும், பொதுமக்களையும் முட்டி வருகின்றன. எனவே காட்டெருமைகள் ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த மாதம் கொடைக் கானல்-வில்பட்டி ரோட்டில் நாயுடுபுரம் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டெருமை அங்கு நின்று கொண்டிருந்த தொழிலதிபர் ஜெபராஜ் என்பவரை முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story