மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு - 79 ரோந்து காவல் படைகள் அமைப்பு + "||" + Parliamentary elections in Ooty Parade of paramilitary forces

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு - 79 ரோந்து காவல் படைகள் அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு - 79 ரோந்து காவல் படைகள் அமைப்பு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஊட்டியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். நீலகிரியில் 79 ரோந்து காவல் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,

நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதி கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையையொட்டி அமைந்து உள்ளது. மேலும் வயநாடு மாவட்டம் அருகே பாட்டவயல், எருமாடு, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளும் உள்ளன.

மலப்புரம் மாவட்டத்தையொட்டி கீழ்நாடுகாணி, தேவாலா உள்ளிட்ட இடங்கள் உள்ளது. பாலக்காடு மாவட்ட எல்லையில் முள்ளி, கிண்ணக்கொரை, இரியசீகை பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளதால், அங்கு மாவோயிஸ்டு அச்சுறுத்தல் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடைபெற கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இந்திய துணை ராணுவத்தினர் 85 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் 90 பேர் வந்து உள்ளனர். தேர்தலின் போது எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பொதுமக்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்த ஊட்டியில் துணை ராணுவத்தினர், போலீசார் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதற்கு ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் தலைமை தாங்கினார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தொடங்கி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மணிக்கூண்டு, லோயர் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையம் வரை கொடி அணிவகுப்பு நடந்தது. துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். முன்னால் வஜ்ரா வாகனம் சென்றது.

நீலகிரியில் 77 பதற்றமான வாக்குச்சாவடிகளிலும், மாவட்ட எல்லையில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்களை கொண்டு செல்லவும், வாக்குப்பதிவுக்கு பின்னர் பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து வரவும் 79 ரோந்து காவல் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா நேற்று ரோந்து காவல் படைகளை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வருவது போலீசாரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக தேர்தல் நடக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.