பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன -தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன -தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 April 2019 10:41 PM GMT (Updated: 16 April 2019 10:41 PM GMT)

புதுவையில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.அங்கு பத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர். எம்.பி. தொகுதிக்கு 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படும். தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் 23,326 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்களிக்கும் அறைகள் அமைக்கப்படும். அந்த தொகுதி வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்று, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஒன்று என 2 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படும்.

புதுவையில் மொத்தம் 2421 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1156 மின்னணு கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1209 வி.வி.பாட் எந்திரங்களும் பயன்படுத்தப்படும். காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் பகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் முகவர்களை நியமித்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. புதுவையில் மொத்தம் 970 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. 25 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் மற்றும் வாக்குச்சாவடி வரை அழைத்து வர தன்னார்வலர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி நிகழ்வுகளும் வலைதளம் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும்.

புதுவை மாநிலத்தில் 7 வாக்குச்சாவடிகள் பெண் வாக்குச்சாவடி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும். தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் 7617 பேருக்கு தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பணி செய்யும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியும். வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மாற்று ஆவணமாக பயன்படுத்தி வாக்களிக்கலாம். புதுவையில் மது விற்பனை செய்ய 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்குள் செல்பவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. புதுவையில் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலால்துறை மூலம் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குகள் தொடர்பாக 68 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 நான்கு சக்கர வாகனங்கள், 24 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு மதுபானக்கடை, 2 சாராயக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது புதுவை மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story