மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 April 2019 10:56 PM GMT (Updated: 16 April 2019 10:56 PM GMT)

மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி கமி‌ஷனராக தற்போது உள்ள பெண் அதிகாரி, ஏற்கனவே பரமக்குடி அறநிலையத்துறை அலுவலகத்தின் உதவி கமி‌ஷனராக இருந்தார். அந்த சமயத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில்களில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பும் வகித்தார். இவர் கடந்த 2016–ம் ஆண்டில் பரமக்குடி உதவி கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். உடனடியாக அந்த பதவியை விட்டு விலகாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “இதுசம்பந்தமாக உரிய அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது“ என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளின் மூலம் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறியுள்ளார். அதன் அடிப்பையில் எடுத்த நடவடிக்கை என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்பட 4 கோவில்களில் கடந்த 10 வருடங்களில் முறைகேடு புகார் குறித்து தலைமை தணிக்கை அதிகாரி கொடுத்த அறிக்கையின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story