நாமக்கல் வேட்பாளர் சின்ராஜ் வெற்றிபெற்றால் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் - மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பிரசாரம்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் வெற்றிபெற்றால் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
ராசிபுரம்,
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கொ.ம.தே.க. வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் அதன் அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமையில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதன்படி நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அத்திபலகானூர் கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெரு மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் அவர்கள் வாக்கு சேகரித்தனர். வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எம்.துரைசாமி தலைமை தாங்கினார். இந்த பிரசாரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜூக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அருந்ததியர் சமுதாய மக்களுக்கு தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 3½ சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, அருந்ததியர் இன மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திவர் கருணாநிதி. இதன்மூலம் கருணாநிதி சமூகநீதியை நிலைநாட்டினார். மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 2006-2011 வரை நடந்த தி.மு.க. ஆட்சியில் அன்றைக்கு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சுழல்நிதி வழங்கினார். ஆனால் கடந்த 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு சுழல்நிதி வழங்கப்படவில்லை. 1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில்தான் மகளிர் சுயஉதவிக்குழு தர்மபுரி மாவட்டத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் பெண்கள் சார்புடைய வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் தி.மு.க. ஆட்சியில் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்டோர் என அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் மானியமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிகளுக்கு மானியத்தொகை முறையாக வழங்கப்படவில்லை. இதனால் மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் தொழிற்கல்வி படிப்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே 18-ந் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜூக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். அவர் வெற்றிபெற்றால் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் ஏற்பட உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் கூறினார்.
இந்த பிரசாரத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஜம்புலிங்கம் (கட்டனாச்சம்பட்டி), தமிழ்மணி (தேங்கல்பாளையம் ஊராட்சி), மாவட்ட பிரதிநிதி லோகமணி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜயபாஸ்கர், அத்திபலகானூர் தி.மு.க. நிர்வாகிகள் கோகுல், ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story