சிதம்பரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - அ.தி.மு.க. நிர்வாகி சிக்கினார்


சிதம்பரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா - அ.தி.மு.க. நிர்வாகி சிக்கினார்
x
தினத்தந்தி 17 April 2019 4:00 AM IST (Updated: 17 April 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க. நிர்வாகி, பறக்கும் படையினரிடம் சிக்கினார். அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர்,

சிதம்பரம் அண்ணா தெருவில் உள்ள வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக சப்-கலெக்டர் விசுமகாஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கூடுதல் பறக்கும் படை அதிகாரி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் நேற்று அண்ணா தெரு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அந்த பையில் பூத் சிலிப்புகளும், 11 ஆயிரத்து 70 ரூபாயும் இருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரம் கொத்தங்குடியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ஸ்ரீதர் (வயது 48) என்பதும், அ.தி.மு.க. நிர்வாகியான அவர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அண்ணா தெருவில் உள்ள வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த பூத் சிலிப்புகளையும், பணத்தையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் ஸ்ரீதர், சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் ஸ்ரீதர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story