அரக்கோணம் தொகுதியில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை -ஜெகத்ரட்சகன் வாக்குறுதி


அரக்கோணம் தொகுதியில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை -ஜெகத்ரட்சகன் வாக்குறுதி
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 2:02 PM GMT)

அரக்கோணம் தொகுதியில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோளிங்கரில் நடந்த இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்குறுதி அளித்தார்.

வேலூர், 

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மாலை சோளிங்கரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் வருமாறு:–

அரக்கோணம் தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புதிதாக சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம் தீட்டி, அதன்மூலம் அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி முழுமையாக ரத்து செய்யவும், ஜவுளி பூங்கா அமைக்கவும் முயற்சி எடுக்கப்படும். ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை–பெங்களூரு தொழில் வழித்தடம் அமைக்கப்படும். மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளை திறக்கவும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ரெயில்வே பாலங்களுக்கு தேவைப்படும் கர்டர்கள், உதிரிபாகங்களை உற்பத்தி செய்துவரும் அரக்கோணம் ரெயில்வே பணிமனையின் தரம் உயர்த்தி, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க முயற்சி எடுக்கப்படும். அரக்கோணம்–சென்னை வரை இயக்கப்படும் மின்சார ரெயில் காட்பாடி வரை நீட்டிக்கப்படும். மேலும் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை அந்த ரெயில் இயக்கவும், அனைத்து விரைவு ரெயில்களும் அரக்கோணம், திருத்தணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அரக்கோணம் ரெயில் நிலையத்தை அதிநவீன வசதிகள் கொண்ட ரெயில் நிலையமாக மாற்றவும், ரெயில்வே மண்டலம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பாலாறு, பொன்னையாறு, கொசஸ்தலை ஆறு, கல்லாறு ஆகிய ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க முயற்சி செய்யப்படும். அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு, பாசனக்கால்வாய்களை சரிசெய்து வேளாண் வளர்ச்சிக்கும், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இலவச மருத்துவ முகாம் மாதந்தோறும் நடத்தப்படும். மேலும் அங்கு வேளாண் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அனைத்து பள்ளி, கல்லூரிகளில் தரமான குடிநீர்வசதி, கழிப்பறை வசதி மற்றும் தரமான நூலகங்கள் அமைக்க ஆவன செய்யப்படும். ஆண்டுக்கு 1,200 மாணவர்களுக்கு எனது கல்வி நிறுவனங்களில் இலவச கல்வி வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவிகள் செய்யப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைத்து இளைஞர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி வழங்கி, அதன்மூலம் அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கவும், தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பு பெறவும் உதவி செய்யப்படும். சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் புதிதாக தாலுகா அலுவலகம், புதிய பைபாஸ் சாலை அமைக்கப்படும். சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு ரோப்கார் அமைக்கப்படும். ஏழை, எளியவர்களுக்கு 60 வகை சீர்வரிசையுடன் திருமணம் செய்து வைக்கப்படும். தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கோவில்களும் புனரமைக்கப்படும். திருத்தணியில் திருப்பதி தேவஸ்தான இடத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பெண்கள் கல்வி பெறவும், பெண் கல்விக்கும் பெரும்பான்மையான பெண்கள் வேலைவாய்ப்பு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பான விளையாட்டு மைதானங்கள் அமைத்து பயிற்சிகள் வழங்கப்படும். சிறு, குறு தொழில் வளரவும், சுற்றுப்புற சூழல் காக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறிய நடைபாதை வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் பெற உதவி செய்யப்படும். சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் தொழில் தொடங்கவும், வியாபாரம் செய்யவும் நிதி உதவி பெற உதவப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story