நாடாளுமன்ற தேர்தல்: 1,179 வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலிகள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு


நாடாளுமன்ற தேர்தல்: 1,179 வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலிகள் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 17 April 2019 11:15 PM GMT (Updated: 17 April 2019 4:39 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிப்பதற்காக அவர்களை வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்துச்செல்லும் வகையில் 1,179 வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலிகள் அனுப்பப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை,

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வசதிக்காக 1,179 வாக்குப்பதிவு மையங்களுக்கு சக்கர நாற்காலிகள் தன்னார்வலர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான பணிகளை கலெக்டர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா, மகளிர் திட்ட இயக்குனர் பெ.சந்திரா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சரவணன், அரசு அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எந்தெந்த வாக்குப்பதிவு மையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ளார்கள் என ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் 1,179 வாக்குப் பதிவு மையங்கள் கண்டறியப்பட்டது.

அந்த மையங்களுக்கு 1,179 சக்கர நாற்காலிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காகவும், சக்கர நாற்காலி இயக்குவதற்காகவும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களித்திடும் வகையில் 2 ஆயிரத்து 372 வாக்குச்சாவடிகளுக்கு ‘பிரெய்லி’ வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் வேட்பாளர், கட்சி, சின்னம், வரிசை எண் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ‘பிரெய்லி’ வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம். அல்லது ஒருவரை துணையுடன் அழைத்து சென்று வாக்களிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 354 இடங்களில் 12 ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை காலை 11 மணி அளவில் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒன்றாக வரவழைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து சென்று வாக்களிக்க செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வாகனங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்த விவரங்களை www.tiruv-a-n-n-a-m-a-l-ai.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story