மாவட்ட செய்திகள்

சென்னை தொகுதிகளுக்குட்பட்ட3,800 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் தயார் + "||" + Chennai blocks in the Prepare arrangements for 3,800 polling stations

சென்னை தொகுதிகளுக்குட்பட்ட3,800 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் தயார்

சென்னை தொகுதிகளுக்குட்பட்ட3,800 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடுகள் தயார்
சென்னை தொகுதிகளுக்குட்பட்ட 3,800 வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் 2-ம் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலையொட்டி வட, தென், மத்திய சென்னை தொகுதிகளுக்குட்பட்ட சுமார் 3 ஆயிரத்து 800 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணி செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வந்து தங்களுடைய பணி ஆணையை வாங்கி, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்றனர்.

மேலும், சென்னை தொகுதிகளை 270-க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரித்து அதில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரம், ஒப்புகை சீட்டு எந்திரம் உள்பட அனைத்து தேர்தல் பொருட்களும் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு இடம் என 16 இடங்களில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

தேர்தல் பொருட்கள் அனுப்பும் மையத்தில் சப்-கலெக்டர், வட்டார வருவாய் அலுவலர், துணை தாசில்தார் ஆகியோரின் மேற்பார்வையில், வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் எடுத்து சென்றனர்.

வாக்குச்சாவடி மையங்களில் தயாராக இருந்த தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பொருட்கள் வந்ததும் அதை சரிபார்த்து பெற்றுக்கொண்டனர். நேற்று பிற்பகலுக்கு மேல் வாக்குச்சாவடி மையங்களை தயார்படுத்தும் பணி நடைபெற்றது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்படும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவற்றை வாக்குச்சாவடி மையங்களின் நுழைவுவாயில் பகுதியில் தேர்தல் பணியாளர்கள் ஒட்டினர். மேலும், தேர்தல் பொருட்களையும் தயாராக எடுத்து வைத்தனர். நேற்று மாலையில் சம்பந்தப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் பொருட்கள் அனைத்தும் சரியாக சென்று இருக்கிறதா? என்பதை அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணித்தனர்.

அதுமட்டுமில்லாமல் மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான பிரகாஷ், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சென்னை ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, பாரதி மகளிர் கல்லூரி உள்பட தேர்தல் பொருட்கள் அனுப்பும் மையங்களை நேரடியாக சென்று பார்த்து ஆய்வு செய்தனர்.

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வந்து சிரமமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் சிறப்பாக செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்வதற்கு சக்கர நாற்காலியும், அதற்கான நடைமேடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவம் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.