மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடியது


மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடியது
x
தினத்தந்தி 18 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 12:37 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் மல்லிப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

சேதுபாவாசத்திரம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15–ந் தேதி கரையை கடந்த கஜா புயல் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் 188 விசைப்படகுகளை சுக்குநூறாக நொறுக்கியது. 54 விசைப்படகுகள் பாதி அளவு சேதமடைந்தன.

முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சமும், பாதி அளவு சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் அரசு நிவாரணம் அறிவித்தது. ஆனால் நிவாரண தொகை போதாது. இந்த தொகைக்கு பழைய படகுகூட வாங்க இயலாது. எனவே நிவாரணத்தை உயர்த்தி ரூ.10 லட்சத்துக்கு குறைவில்லாமல் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் இந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. எனவே மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தனர். மீனவர் போராட தயாரானதை தொடர்ந்து அரசு 2 மாதங்களுக்கு முன் பாதி சேதமடைந்த 54 படகுகளுக்கு ரூ.3 லட்சம் மீனவர்கள் வங்கி கணக்கில் செலுத்தியது. கடந்த மாதம் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் முழுமையாக சேதமடைந்த 54 படகுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் புயல் தாக்கி 5 மாதங்களை கடந்தும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த 134 படகு உரிமையாளர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரத்தில் கடலுக்குசென்று மீன்பிடித்து வருகிறார்கள். இதனால் மீனவர்களின் விசைப்படகுகள் வரிசையாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் சேதுபாவாசத்திரம் மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மல்லிப்பட்டினம் பகுதியில் புயலில் சிக்கி ஏராளமான விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் சேதமடைந்ததால் ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலத்தின் போது துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் படகுகள் இன்றி தற்போது மீன்பிடிதுறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நாட்டுபடகு மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை உயர்த்தி வழங்கி இருந்தால் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைத்து கடலுக்கு சென்று இருப்பார்கள். நிவாரணத்தை உயர்த்தி வழங்காததால் கடலுக்கு செல்லமுடியவில்லை என மீனவர்கள் வருத்தத்துடன் கூறினர்.


Next Story