அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு
கும்பகோணத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற தி.மு.க.வினர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்புக்கார தெருவில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளின் கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த கொடிகள் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தி.மு.க.வினர் கும்பகோணம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி வீராசாமியிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
ஆனால் கொடிகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அங்கு சென்ற தி.மு.க.வினர் அ.தி.மு.க., பா.ஜனதா கொடிகளை அகற்ற முயன்றனர்.
அப்போது அங்கு அ.தி.மு.க.வினர் வந்தனர். இதையடுத்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலஸ் இன்ஸ்பெக்டர் மனுவேல் மற்றும் போலசார் அங்கு விரைந்து சென்று 2 கட்சியினரையும் சமாதானம் செய்தனர். மேலும் அங்கு கட்டப்பட்டிருந்த கொடிகளையும் அகற்றினர்.