டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: தஞ்சை மாவட்டத்தில், 2 நாளில் ரூ.16¼ கோடிக்கு மது விற்பனை


டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை: தஞ்சை மாவட்டத்தில், 2 நாளில் ரூ.16¼ கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 7:19 PM GMT)

தேர்தலையொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.16¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஓட்டுப்பதிவின் போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் அசம்பாவித சம்பவம் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் கடந்த 16–ந் தேதி முதல் இன்று(வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 153 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. அனைத்து கடைகள் மற்றும் ஒட்டல்களுடன் இணைந்த டாஸ்மாக் கடைகளும் கடந்த 16–ந் தேதி முதல் மூடப்பட்டன.

3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் கடந்த 15–ந் தேதி டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக விற்பனை நடைபெற்றது. சிலர் அதிக அளவில் மதுபானங்களை வாங்கிச்சென்றனர். தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் ரூ.3 கோடியே 50 லட்சம் முதல் ரூ.3 கோடியே 75 லட்சம் வரை விற்பனை செய்யப்படும்.

ஆனால் கடந்த 14–ந் தேதி மட்டும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.6 கோடியே 35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இது வழக்கத்தை விட மேலும் ஒரு மடங்கு அதிகம் ஆகும். 15–ந் தேதி ரூ.9 கோடியே 86 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இது வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ.16 கோடியே 21 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில்தான் அதிக அளவில் மது விற்பனை நடைபெறும். தற்போது தேர்தலையொட்டி அதிக அளவில் மது விற்பனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story