நாடாளுமன்ற தேர்தல் – சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணி தர்மபுரி கலெக்டர் மலர்விழி ஆய்வு
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடி மையங்களும், பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 262 வாக்குச்சாவடி மையங்களும், பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களும், அரூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச்சாவடி மையங்களும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச்சாவடி மையங்களும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 1,787 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேற்கண்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், வாக்காளர் பட்டியல், அழியாத மை, பதிவேடுகள், சீல் மற்றும் எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தர்மபுரியை அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குச்சாவடி வாரியாக தனித்தனியாக இந்த பொருட்களை பிரித்து அனுப்பப்பட்டது. இந்த பொருட்களை எடுத்து செல்லும் பணிக்கு வேன்கள், லாரிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களை அனுப்பும் பணியை தர்மபுரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மலர்விழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பொருட்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தந்த மையங்களுக்கு சென்று சேருவதை சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும், என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர் சஞ்சிவ்குமார் பெஸ்ரா, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர் கே.ஜி.ஷாந்தாராம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவன்அருள், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, தனிதுணை கலெக்டர் அஜய் சீனிவாசன், அரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி, தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், சுகுமார், லதா மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உடனிருந்தனர்.