தூத்துக்குடி தொகுதியில் தேர்தலை நிறுத்த துடிக்கும் ஆசை நிறைவேறாது கனிமொழி பேட்டி


தூத்துக்குடி தொகுதியில் தேர்தலை நிறுத்த துடிக்கும் ஆசை நிறைவேறாது கனிமொழி பேட்டி
x
தினத்தந்தி 17 April 2019 10:15 PM GMT (Updated: 17 April 2019 7:56 PM GMT)

வேலூரை போல் தூத்துக்குடி தொகுதியிலும் தேர்தலை நி றுத்த துடிக்கும் ஆசை நிறைவேறாது என கனிமொழி தெரிவித்தார்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற துறைகளை தன் கையில் வைத்துக்கொண்டு தங்கள் விரும்பும் வகையில் செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து கொண்டதுபோல் நடந்துகொள்கின்றன.

நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிராக உள்ள எதிர்க்கட்சிகள் மீது வருமான வரி சோதனை, தேர்தல் ஆணைய பிரச்சினை என தொடர்ந்து நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையிலும், சுற்றியுள்ளவர்களை துன்புறுத்தும் வகையிலும் தோல்வி பயத்தால் இவ்வாறு செய்து வருகின்றனர்.

சோதனைக்கு வரும்போது உரிய ஆவணங்கள் இன்றி வருகின்றனர். வேட்பாளர் என்பதால் சோதனை செய்ய முடியுமா?. இதை திட்டமிட்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கவும், தேர்தல் நேரத்தில் கெட்டப்பெயரை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் செய்கின்றனர்.

தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. தலைவர்கள் வீட்டில் கோடி, கோடியாக பணம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு எந்தவித பதிலும் இல்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். வேலூர் தொகுதியை போல் தூத்துக்குடி தொகுதியிலும் தேர்தலை நிறுத்திவிட வேண்டும் என துடிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆசை நிறைவேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story