ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


ஈரோடு மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 18 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஈரோடு,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. அதன்பின்னர் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

கடந்த வாரம் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது. இதில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களை பொருத்தி மாதிரி வாக்குப்பதிவை நடத்தினர். அதன்பிறகு மீண்டும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் விவிபேட் கருவிகள் ஆகியன வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டது.

ஈரோடு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை, ஏற்கனவே வாக்குச்சாவடி மையங்களுக்காக பிரித்து வழங்கப்பட்ட வாகனங்களில் தேர்தல் அதிகாரிகள் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அதிகாரிகள் சரிபார்த்து அனுப்பினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது. அங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை வைப்பதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் கருவிகள் ஆகியன அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story