ஈரோட்டில் மகாவீர் ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் வடமாநிலத்தினர் ஊர்வலம் சென்றனர்


ஈரோட்டில் மகாவீர் ஜெயந்தி உற்சாக கொண்டாட்டம் வடமாநிலத்தினர் ஊர்வலம் சென்றனர்
x
தினத்தந்தி 17 April 2019 10:45 PM GMT (Updated: 17 April 2019 8:58 PM GMT)

ஈரோட்டில் மகாவீர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றனர்.

ஈரோடு,

மகாவீர் ஜெயந்தி நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் விழாவாக எடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதேபோல் ஈரோட்டில் வாழும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சார்பில் மகாவீர் ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஈரோடு பிரப்ரோடு தெப்பக்குளம் வீதியில் உள்ள ஜெயின் கோவிலில் நேற்று காலையில் வடமாநிலத்தினர் திரண்டனர். அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்பின்னர் வடமாநில பக்தர்கள் விழாவை கொண்டாடும் விதத்தில் ஊர்வலம் சென்றனர்.

ஜெயின் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பிரப்ரோடு, காமராஜர்ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதி வழியாக சென்று மீண்டும் ஜெயின் கோவிலில் நிறைவடைந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர்.

ஊர்வலம்

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரரின் பிறந்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதில் அகிம்சையே தர்மம், எந்த ஜீவனையும் கொல்லக்கூடாது, எவரையும் சார்ந்திருக்க கூடாது, எவரையும் அடிமைப்படுத்தக்கூடாது போன்ற மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவ கொள்கையை தெரியப்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றோம். மேலும் உலக அமைதிக்காவும் ஊர்வலம் நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story