துறையூர் அருகே 3 கரடிகள் நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்


துறையூர் அருகே 3 கரடிகள் நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 18 April 2019 4:00 AM IST (Updated: 18 April 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே 3 கரடிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

துறையூர்,

துறையூரை அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பாலகிருஷ்ணம்பட்டி. இங்கு அய்யாற்று கரை அருகே உள்ள விவசாயி செழியன் என்பவருடைய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பெரிய காலடி தடங்கள் இருந்தது. இதை கண்ட செழியன், அந்த தடங்கள் வழியாக நடந்து சென்றார். அவ்வாறு அவர் நடந்து அய்யாறுக்கு சென்றபோது, ஆற்றுக்குள் சுமார் 3 அடி உயரத்தில் 2 கரடிகளும், ஒரு குட்டி கரடியும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த கரடிகள் செழியனை பார்த்து துரத்த ஆரம்பித்தது. இதனால் செழியன் அங்கிருந்து தப்பித்து ஊருக்குள் வந்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் உள்ள வயலில் வேலை செய்த பெண்களை அங்கிருந்து வெளியே வர செய்தனர். பின்னர் ஊர் மக்கள் ஒன்றிணைந்து கரடியை அந்த பகுதியில் இருந்து துரத்தினர்.

மேலும் இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வன அலுவலர் ஞானசேகரன் தலைமையில் அங்கு வந்த வனத்துறையினர், இந்த பகுதி எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, சேலம் பகுதியை சேர்ந்தது என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டனர். இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களை வன விலங்குகளிடம் இருந்து காக்க வேண்டி வனத்துறையினர் எல்லை பற்றி கூறி விட்டு சென்றது முறையானது இல்லை, என்றனர்.

மேலும், மலைப்பகுதியில் வனத்துறையினர் தண்ணீர் தொட்டி அமைப்பது இல்லை. இதனால் வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் தண்ணீர் தேடி ஊர்களிலும், வயல்வெளி மற்றும் அய்யாற்று ஓடை பகுதிகளிலும் இரவு மற்றும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வனத்துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கூண்டு வைத்து கரடிகளை பிடிக்க வேண்டும். வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தொட்டியை வனத்துறையினர் வைக்க வேண்டும். அதற்காக அரசு கொடுக்கும் சலுகைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேரிக்கை விடுத்து உள்ளார்கள்.


Next Story