சாத்தூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மாமனார் தோட்டத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல் - கட்சி அலுவலகம், வீட்டிலும் அதிரடி சோதனை


சாத்தூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மாமனார் தோட்டத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல் - கட்சி அலுவலகம், வீட்டிலும் அதிரடி சோதனை
x

சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியனின் மாமனார் தோட்டத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.43 லட்சம் சிக்கியது. மேலும் கட்சி அலுவலகம், வேட்பாளரின் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலங்குளம்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன் போட்டியிடுகிறார். அவர் அக்கட்சியின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

அவரது சொந்த ஊரான எதிர்கோட்டையில் அ.ம.மு.க. மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த அலுவலகத்தில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சாத்தூர் துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று எதிர்கோட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்துக்கு திடீரென சென்றனர்.

அப்போது அதே பகுதியில் வேட்பாளர் சுப்பிரமணியனின் மாமனார் காளிமுத்துவுக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அங்கும் அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த சிலர் அதிகாரிகளை பார்த்ததும் தப்பி ஓடினர்.

மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற ராமுத்தேவன்பட்டியை சேர்ந்த மகாதேவன் (வயது 23) என்பவரை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அவர் வைத்திருந்த பையை பறிமுதல் செய்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, மகாதேவனை பிடித்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் அ.ம.மு.க. தொண்டர் என்றும், பட்டுவாடா செய்வதற்காக காளிமுத்து தோட்டம் உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த தோட்டத்துக்கு சென்று தீவிர சோதனையை தொடர்ந்தனர். இதுதொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை இணை இயக்குனர் பிரேம்கமல் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் எதிர்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகம், வேட்பாளர் சுப்பிரமணியனின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சுப்பிரமணியனின் மகன் விக்னேஸ்வரனிடமும் விசாரணை நடந்தது. இந்த சோதனை நீண்ட நேரமாக நீடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. ஆனால், எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும் போது, வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியனின் மாமனார் தோட்டத்தில் இருந்து மொத்தம் ரூ.42 லட்சத்து 87 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தனர். 

Next Story