பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படை பாதுகாப்பு - பழனி சப்-கலெக்டர் பேட்டி
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினரை கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
பழனி,
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில், பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பணி உத்தரவு வழங்கும் பணி, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதை பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 322 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் ஒரு வாக்குச்சாவடிக்கு நிலைய அலுவலர் உள்பட மொத்தம் 4 பணியாளர்கள் செயல்படுவர். கொடைக்கானல் பகுதியில் மலைக்கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பணியாளர்கள் 3 பஸ்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல் பழனி பகுதியில் பாலசமுத்திரம், அய்யம்புள்ளி, ஆண்டிப்பட்டி வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத் தப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளன. எனவே பெரும்பாலும் தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஏதேனும் எந்திரம் கோளாறு ஏற்பட்டால், அங்கு என்ஜினீயர் அடங்கிய தொழில் நுட்ப குழுவினர் அதனை சரிசெய்ய தயார் நிலையில் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் மையமாக உள்ள பகுதியில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சுதீஷ்குமார் குப்தா, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பணி உத்தரவு பணி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிம் கேட்டறிந்தார். அப்போது தாசில்தார் பழனிச்சாமி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story