வடமதுரை அருகே, மர்மமாக இறந்த பள்ளி மாணவி கொலை? உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்


வடமதுரை அருகே, மர்மமாக இறந்த பள்ளி மாணவி கொலை? உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 17 April 2019 10:00 PM GMT (Updated: 17 April 2019 10:16 PM GMT)

வடமதுரை அருகே மர்மமாக இறந்த பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல்லில் மறியல் செய்தனர்.

திண்டுக்கல்,

வடமதுரை அருகேயுள்ள ஜி.குரும்பபட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் கலைவாணி (வயது 12). இவள் வடமதுரை அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் கலைவாணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

இதற்கிடையே வேலைக்கு சென்ற பெற்றோர் மாலையில் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அங்கு கலைவாணி மின்வயரை வாயில் கடித்த நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் கலைவாணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக் கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து கலைவாணியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், வீட்டில் தனியாக இருந்த அவளை யாரோ கொலை செய்து இருக்கிறார்கள் என்றும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கூறினர். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று மறுத்தனர்.

அதோடு, அவர்கள் அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல்-திருச்சி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், திண்டுக்கல் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் மேல்விசாரணை நடத்தி, கொலை செய்யப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டு, கலைவாணியின் உடலை வாங்கி சென்றனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல்-திருச்சி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story